கூலிட்ஜ்,
சர்வதேச கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்து 11 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் தனது கிரிக்கெட் அறிமுகப் போட்டியின் புகைப்படத்தைப் பதிவிட்டு உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி இலங்கைக்கு எதிராக தம்புலாவில் நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வந்து 11 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை நினைவுகூரும் வகையில் கோலி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
ஒருநாள் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தான் 18 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறும் புகைப்படத்தைத்தான் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த 11 ஆண்டுகளில் விராட் கோலி ஏராளமான கடினமான பாதைகளைக் கடந்து தற்போது கேப்டனாக உயர்ந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் 20 ஆயிரம் ரன்களைக் குவித்த ஒரே வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் 43 சதங்களுடன் கோலி 2-வது இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் 68 சதங்களை கோலி அடித்துள்ளார்.
இதுவரை விராட் கோலி 239 ஒருநாள் போட்டிகளில் 11,520 ரன்களைச் சேர்த்துள்ளார். அதில் 54 அரை சதங்கள், 43 சதங்கள் அடங்கும். டெஸ்ட் போட்டியில் கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகமான கோலி, இதுவரை 77 போட்டிகளில் 6,613 ரன்கள் ( அதில் 25 சதங்கள், 20 அரை சதங்கள்) அடித்துள்ளார். டி20 போட்டியில் கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகான கோலி, 70 ஆட்டங்களில் 2,369 ரன்கள் சேர்த்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் கோலியின் பதிவில், "கடந்த 2008-ம் ஆண்டு, இதே நாளில் (ஆகஸ்ட்18) தான் நான் என் பதின்ம வயதில் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினேன். இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. கடவுளின் ஆசிகள் என்மீது இந்த அளவுக்குப் பொழியும் என்று கனவுகூட காணவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ