லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை முதல் இன்னிங்சில் 258 ரன்களுக்கு சுருட்டியதில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நேதன் லயன் டெனிஸ் லில்லியின் 355 விக்கெட்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் சாதனையைச் சமன் செய்தார்.
ஆனாலும் அவர் 2ம் நாள் ஆடட்த்தில் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் தரம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜோஷ் ஹேசில்வுட்டின் லைன் மற்றும் லெந்த் பற்ரி கடுமையாகப் பாராட்டிய நேதன் லயன், கமின்ஸின் பிற்பகுதி பவுன்சர் வீச்சையும் பாராட்டினார், ஆனால் மற்றபடி 138/6 என்ற நிலையிலிருந்து 258 ரன்கள் வரை அடிக்க அனுமதித்திருக்கக் கூடாது என்கிறார் நேதன் லயன்.
மேலும் 3 கேட்ச்களும் விடப்பட்டது, இதுவும் நேதன் லயன் அதிருப்திக்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
“2ம் நாள் ஆட்டத்தைப் பார்க்கும் போது நான் வெளிப்படையாக நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நாங்கள் சிறப்பாக ஆடியதாகக் கூற முடியாது. ஜோஷ் ஹேசில்வுட் எப்போதுமே உலகத்தரம் வாய்ந்த பவுலர் அதுவும் 2ம் நாள் அவர் தனித்திறமையுடன் ஆக்ரோஷமாக வீசினார், பாட் கமின்ஸ் தேநீர் இடைவேளைக்குப் பிறகு வீசிய பவுன்சர்கள் நீங்கலாக நாங்கள் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை.
2ம் நாள் ஆட்டம் எங்களில் பலருக்குத் திருப்தி அளிக்கிறது, ஆனாலும் இன்னும் முன்னேற்றம் தேவை.
டியூக்ஸ் பந்துகள் பளபளப்பை இழந்த பிறகு மென்மையாகி விடும், பிட்சும் ஸ்லோவாக உள்ளது இதனால் பந்துகள் ஸ்லிப்பில் கேட்ச் ஆனாலும் முன்னால் விழுகிறது. சுமார் 6 முறை எட்ஜ் ஆகி பீல்டர்களுக்கு முன்னால் விழுந்தது. இங்குதான் ஷார்ட் பிட்ச் பவுலிங் கை கொடுக்கும். 2013-14இல் ஷார்ட் பிட்ச் பந்துகளை மைக்கேல் கிளார்க் கேப்டனாக இருக்கும் போது பயன்படுத்தினார். ஆனால் நேற்று கொஞ்சம் தாமதமாக ஷார்ட் பிட்ச் உத்தியை வந்தடைந்தோம்.
நாம் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகிறோம், உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக ஆடுகிறோம் எப்படியும் அங்கும் இங்கும் பேட்டிங் கூட்டணிகள் அமையவே செய்யும். பவுலர்கள் தங்கள் அடிப்படைகளை நீண்டநேரங்களுக்கு அங்கு செய்து வருகின்றனர், ஆனால் ஆஸ்திரேலிய தரநிலைகளுக்கு நாங்கள் நேற்று ஆடவில்லை. அதாவது ஓய்வறையிலும் எங்கள் பவுலிங் கூட்டணியிலும் உள்ள தரநிலை இல்லை. இன்னும் முன்னேற்றம் தேவை” என்று ஆதங்கப்பட்டுள்ளார் நேதன் லயன்.