ஸ்ரீகாந்த்துடன் வி.பி.சந்திரசேகர். | கோப்புப் படம். 
விளையாட்டு

இந்திய, தமிழ்நாடு அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மரணம்

செய்திப்பிரிவு

முன்னாள் இந்திய மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மாரடைப்பினால் மரணமடைந்தார். இவருக்கு வயது 57.

விபி என்று அன்பாக அழைக்கப்படும் இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதிரடி தொடக்க வீரரான வி.பி.சந்திரசேகர் 1987-88-ல் தமிழ்நாடு ரஞ்சி ட்ராபியை வென்ற போது அரையிறுதியில் உ.பி.அணிக்கு எதிராக 160 ரன்களையும், இறுதியில் ரயில்வேஸ் அணிக்கு எதிராக 89 ரன்களையும் எடுத்தவர். இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ளார் இதில் 53 ரன்கள் அதிகபட்சம். 81 முதல் தரப் போட்டிகளில் 4,999 ரன்களை 10 சதங்களுடன் எடுத்துள்ளார். பிற்பாடு ஒருக்கட்டத்தில் கோவா அணிக்கு ஆடினார். தமிழ்நாடு அணியையும் வழிநடத்தியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு பயிற்சி மற்றும் வர்ணனையில் கவனம் செலுத்தி வந்தார்.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிராக இரானி கோப்பையில் 4வது இன்னிங்சில் 56 பந்துகளில் சதம் கண்டார். அப்போது அதுதான் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிவேக சத சாதனையாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலாளராகவும் செயல்பட்டார். முதல் ஐபிஎல் ஏலத்தில் தோனியை ஏலம் எடுக்க பிரதான காரணமாக இருந்தவர் வி.பி.சந்திரசேகர் ஆவார். 2012-13-ல் தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக திகழ்ந்தார். தொலைக்காட்சி வர்ணனையில் இவரது நகைச்சுவை உணர்வு பெரிதும் ரசிக்கப்பட்ட ஒன்று.

இவரது மரணத்துக்கு முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர், பிசிசிஐ பிரத்யேகமாக இரங்கல் தெரிவித்துள்ளது.

ராகுல் திராவிடுடன் சிறப்பு ‘பந்தம்’:

ராகுல் திராவிட்டுடன் இவருக்கு நீண்ட கால நட்பு இருந்தது, “ராகுல் திராவிடுக்கு ஸ்வீப் ஆடுவது எப்படி என்று நான் கற்றுக் கொடுத்தேன்” என்று அவர் கூறுவார். ராகுல் திராவிட் மகன் சென்னையில் உள்ள விபி கோச்சிங் மையத்துக்கு அடிக்கடி வரக்கூடியவர்.

பன்முக ஆளுமையான வி.பி.சந்திரசேகர் 2004-2006 தேசிய அணித்தேர்வுக்குழுவில் இருந்தார். திறனை கண்டிபிடிப்பதில் வல்லவர் என்று புகழப்பட்டவர்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 போட்டித் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளர் இவர்தான். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இவருடன் நெருக்கமானவர், ஸ்ரீகாந்த் கூறும்போது, “பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.. என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் தனித்துவமான ஒரு அதிரடி வீரர் அவர். இந்தியாவுக்காக அதிகம் ஆடமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே. நாங்கள் இருவரும் வர்ணனை சேர்ந்து செய்திருக்கிறோம், மிகவும் அன்பானவர்” என்றார்.

தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதிர்ச்சியும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT