விளையாட்டு

அஜிங்கிய ரஹானேயின் ஐபிஎல் வாழ்க்கையில் முக்கியத் திருப்பம்: ராஜஸ்தான் ராயல்ஸை கைவிடுகிறார்?

செய்திப்பிரிவு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆடிவரும் அஜிங்கிய ரஹானேவை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கொண்டு வர பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஒப்பந்தம் கைகூடிவிட்டால் ரஹானே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக செய்தி ஏஜென்சி ஒன்றிற்கு இரு அணிக்கும் நெருக்கமான ஒருவர் கூறும்போது, “ஆம், ரஹானேயை டெல்லி கேப்பிடல்ஸ் இழுக்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த டீல் டெல்லி கேப்பிடல்ஸுக்குச் சாதகமாக அமையமா என்பது உறுதிபடத் தெரியவில்லை, ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு நிறைய விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியுள்ளது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அவர் மிகப்பெரிய விளம்பரத்தூதர், ஆனாலும் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

கடந்த ஆண்டு ஷிகர் தவணை சன் ரைசர்ஸ் அணியிலிருந்து கொண்டு வந்தது டெல்லி கேப்பிடல்ஸ். தவண் 521 ரன்களை 5 அரைசதங்களுடன் எடுத்து நல்ல சீசனாகக் களைக்கட்டினார். இதனால்தான் 2012க்குப் பிறகு டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

அனுபவமும் இளமையும் சேர்ந்த கலவைத் தேவைப்படுகிறது என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார், தவண், இஷாந்த் சர்மா கடந்த முறை ஆடியது எப்படி அமைந்தது, அதேபோல் ரஹானேவை டெல்லி அணிக்குக் கொண்டு வருவது நிறைவேறினால் அது ஒரு கனவு நகர்த்தல்தான், என்றார்.

2008, 2009ல் மும்பை இண்டியன்ஸுக்கு ஆடினார் ரஹானே. 2010 தொடரி ஆடவில்லை, 2011-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்தார். ராஜஸ்தான் அணி தடை செய்யப்பட்ட போது புனே அணிக்கு ஆடினார். இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி இவரைப் பிடித்துப் போட வலைவிரித்துள்ளது.

SCROLL FOR NEXT