விளையாட்டு

முடிவுக்கு வருகிறதா மொகமது ஷசாத் கிரிக்கெட் வாழ்க்கை? - ஆப்கான் ஒப்பந்தத்திலிருந்து கால்வரையற்ற நீக்கம்

செய்திப்பிரிவு

ஆப்கான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக அதன் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான மொகமது ஷசாத்தின் ஒப்பந்தத்தை காலவரையற்ற சஸ்பெண்ட் செய்துள்ளது.

இதனையடுத்து தோனியின் ரசிகரும், அனுசரணரும் ஆன மொகமது ஷசாத்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதோ என்று ஆப்கான் கிரிக்கெட் வட்டாரங்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.

நாட்டை விட்டு வெளியே சென்று விளையாட ஆப்கான் கிரிக்கெட் சங்கத்தின் முன் கூட்டிய அனுமதி தேவை ஷஸாத் இதனை மீறிவிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டி ஒப்பந்தத்தை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்ளது.

மேலும் ஆப்கன் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு முறை கமிட்டியின் முன் ஜூலை 20 மற்றும் 25 ம் தேதி ஆஜராக வேண்டும். இதில் உலகக்கோப்பையின் போது நடந்த விதிமீறல்கள் குறித்து ஷசாத்திடம் விசாரிக்கவுள்ளனர்.

ஷஸாத் பெஷாவரில் இருந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டே ஷசாத்திடம் ஆப்கான் வாரியம் எச்சரித்த போது உடனடியாக ஆப்கானுக்குக் குடிபெயர்ந்து விடுங்கள் இல்லையெனில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்திருந்தனர்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பையின் போது இவர் உடல்தகுதி இல்லை என்று கூறி அணியிலிருந்து நீக்கினர், ஆனால் ஷசாத் தான் முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும் தன்னை நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டதாகக் கூறியதிலிருந்தே ஆப்கான் வாரியம் அவரைக் குறிவைத்து வந்தது, தற்போது இந்த ஒப்பந்த நீக்கம் நடைபெற்றுள்ளது.

இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் சோதனைக் காலக்கட்டம்.

SCROLL FOR NEXT