மழை காரணமாக ஆடுகளம் மூடப்பட்ட காட்சி : படம் உதவி பிசிசிஐ 
விளையாட்டு

மழை விளையாடியது: இந்தியா-மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் போட்டி ரத்து 

செய்திப்பிரிவு

கயானா,

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே கயானாவில் நேற்று நடக்க இருந்த முதல் ஒருநாள்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ஏற்கெனவே மழையால் ஆட்டம் 2 மணிநேரம் தாமதமாகத் தொடங்கியது. அதன்பின் போட்டி தொடங்கி 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை தொடரவே ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றிய நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது.

முதல் ஆட்டம் கயானாவில் பகல் ஆட்டமாக நேற்று நடந்தது. அதன்பிடி ஆட்டம் தொடங்க இருந்தபோது மழை பெய்ததால், ஆட்டம் தாமதமானது. மழை நின்றபின், 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். லூயிஸ், கெயில் ஆட்டத்தைத் தொடங்கினர். முகமது ஷமியும், புவனேஷ்வர் குமாரும் ஆடுகளத்தின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி பந்தை நன்றாக ஸ்விங் செய்தார்கள். இதனால், கெயில், லூயிஸ் ரன் சேர்க்க சிரமப்பட்டனர்.

லூயிஸ் 4-வது ஓவரிலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டியது. ஷமி வீசிய ஓவரில் கால்காப்பில் லூயிஸ் வாங்கினார். ஆனால் அதற்கு நடுவர் அவுட் தரவில்லை. ஆனால், டிவி ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டெம்பைத் தாக்கியது தெளிவாகத் தெரிந்தது. இந்திய அணி டிஆர்எஸ் முறைக்குச் சென்றிருந்தால், நிச்சயம் லூயிஸ் ஒரு ரன்னில் வெளியேறி இருப்பார்.

இருப்பினும் லூயிஸ் அவ்வப்போது தனது அதிரடியால் ரன் வேகத்தைக் குறையாமல் பார்த்துக்கொண்டார். ஆனால், முகமது ஷமியின் அவுட் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள கெயில் மிகவும் சிரமப்பட்டார். 10 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்திருந்தது.

தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய கெயில் 31 பந்துகளில் 4 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தில் கிளீன் போல்டாகி கெயில் வெளியேறினார். கெயிலின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக மோசமான ஸ்ட்ரைக் ரேட் 12.9 என்பது இதுவாகத்தான் இருக்கும்.

அடுத்து ஷாய் ஹோப் களமிறங்கி, லூயிஸுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடிவந்தனர். 13 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதையடுத்து, ஆட்டத்தை 34 ஓவர்களாக குறைக்கலாம் என்று நடுவர்கள் முடிவு செய்தனர்.

ஆனால், மைதானத்தின் ஈரம், மழை வருவதற்கான அதிகமான சாத்தியங்கள் ஆகியவற்றால் ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

2-வது ஒருநாள் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயின் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

SCROLL FOR NEXT