விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேயை 7-5, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்திய ரோஜர் பெடரர், இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச்சைச் சந்திக்கிறார்.
மிகவும் துல்லியமான டென்னிஸ் ஆட்டத்தை பெடரர் வெளிப்படுத்தினார், இது முர்ரேவுக்கு அதிர்ச்சியளித்தது. ஆனால் இருவருமே நன்றாகவே விளையாடினர், ஆனாலும் பெடரர் இப்போது ஆடும் ஆட்டம், அவரே கூறுவது போல், ‘தன் வாழ்நாளின் சிறந்த ஆட்டம்’ ஆகும்.
பெடரரின் ஆட்டம் இவ்வாறான துல்லியத்தை எட்டியதற்கு ஒரு எளிய உதாரணமாக ஒன்றைச் சுட்டிக் காட்டலாம். இந்த தொடரில் அவரது சர்வ் ஒரேயொரு முறைதான் முறியடிக்கப்பட்டுள்ளது என்பதே அது. முர்ரேவுக்கு ஆட்டத்தின் முதல் கேமில் பிரேக் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பெடரரின் சர்வ் வெற்றி கொள்ள முடியாத உச்சத்துக்குச் சென்றது.
முர்ரே அதிகபட்சமாக என்ன செய்யமுடியும் என்றால் தன் சர்வை இழக்காமல் ஒவ்வொரு செட்டையும் டை-பிரேக்கருக்கு நகர்த்துவதையே, அதில்தான் முர்ரேவுக்கு லேசான வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் அதற்கும் பெடரரின் ஆட்டம் இடம்கொடுக்கவில்லை.
முர்ரேவின் 2-வது சர்வ் பலவீனங்களைப் பயன்படுத்தி முதல் 2 செட்களில் கடைசியில் அவரது சர்வை முறியடித்து வென்றார் பெடரர், ஆனால் பெடரரின் முதல் சர்வ் முதல் செட்டில் 85% உள்ளே விழுந்தது. முதல் சர்வ் அவ்வளவு துல்லியமாக அமைந்தால் எதிரணி வீரர் எவ்வளவு பெரிய ரிடர்ன் மாஸ்டராக இருந்தாலும் ஒன்றும் செய்து விட முடியாது, முர்ரேவுக்கும் அதுதான் நடந்தது. முதல் செட்டில் 11 ஏஸ்களும் பெடரருக்கு பலம் சேர்த்தது.
2-வது செட்டில் பெடரரின் முதல் சர்வ் 61% துல்லியமாக அமைந்தது. 56 வின்னர்களையும் அடித்துள்ளார் பெடரர்.
ஆட்டத்தின் மறக்க முடியாத ஒரு கணம் எதுவென்றால் அது 2-வது செட்டில் 4-5 என்ற நிலையில் முர்ரே சர்வ் செய்த போது 15 நிமிடங்கள் அந்த சர்வ் கேம் நீண்டது, இருவரும் ஆடிய ஷாட்களின் தரம் ஆட்டம் முடிந்த பிறகும் நீண்ட நாட்கள் நினைவில் தங்கக் கூடியது. இதில் பெடரர் சார்பாக இருந்த 5 செட் பாயிண்ட்களை முர்ரே போராடி முறியடித்தார். கடைசியில் ஒரு ஏஸ் வின்னரையும் அடித்தார். 5-5 என்று ஆனது, பெடரர் தனது சர்வை ஒரு புள்ளி கூட முர்ரேவுக்கு விட்டுக் கொடுக்காமல் சடுதியில் முடித்து 6-5 என்று முன்னிலை பெற, நீண்ட சர்வ் கேமை ஆடிய முர்ரேயிடம் உடனடியாக முக்கிய சர்வ் வந்தது.
ஆனால் முர்ரேவுக்கு தனது சாதுரியம் மற்றும் ஆக்ரோஷம் கலந்த டென்னிஸ் ஆட்டத்தைக் காண்பித்த பெடரர் செட்டைக் கைப்பற்றினார்.
3-வது செட்டில் 5-4 என்று முன்னிலை பெற்ற பெடரர் 6-4 என்று கைப்பற்றினார். முர்ரேவின் 2-வது சர்வ்களுக்கு முன்னால் வந்து ஆக்ரோஷம் காட்டினார், அதில் ஒரு ஷாட் உண்மையில் நினைத்து பார்க்க முடியாதது. பேக்ஹேண்ட் ஷாட் ஒன்று குறுக்காக ஆடப்பட்டது. சும்மா தட்டி விடுவது போல்தான் இருந்தது ஆனால் முர்ரே அதிர்ச்சியில் நின்றார்.
இறுதிப் போட்டியில் பெடரர்-ஜோகோவிச் மோதுகின்றனர், இன்னொரு அபாரமான சவால் நிறைந்த உயர்தர டென்னிஸ் ஆட்டம் நமக்கு காத்திருக்கிறது.
மொத்தத்தில் முர்ரேயின் 2-வது சர்வ் பலவீனத்தை பெடரர் நன்றாக ஒர்க்-அவுட் செய்துள்ளார். முர்ரே இதனைச் சரியாகக் கையாள முடியாததோடு, பெடரரின் சப்லைம் டென்னிஸ் முன்னால் தோல்வியும் ஒரு பெருமை என்ற மனநிலைக்கு வந்திருப்பார்.