விளையாட்டு

கனடா குளோபல் டி20யில் குழப்பம்: யுவராஜ் தலைமை அணி உட்பட களமிறங்க மறுத்த அணிகள்

செய்திப்பிரிவு

கனடா குளோபல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் புதன் கிழமையன்று டொராண்டோ நேஷனல்ஸ் மற்றும் மாண்ட்ரீல் டைகர்ஸ் அணிகள் மோதவிருந்த போட்டி அணிகள் களமிறங்க மறுத்தன.

அதாவது இரு அணிகளும் விடுதியிலிருந்து மைதானத்துக்கு வரும் பேருந்தில் இரு அணி வீரர்களும் ஏற மறுத்ததாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்தி தெரிவிக்கிறது.

இந்தத் திடீர் குழப்பத்துக்கும் அணி வீரர்களின் எதிர்ப்புக்கும் காரணம் வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாததே. இதனால் இரு அணிகள் மோதும் இந்த ஆட்டம் 2 மணி நேரம் தாமதமானது.

இந்தப் போட்டியை நேரலை ஒளிபரப்பு செய்யும் டிவி நிறுவனமும் போட்டி தாமதமானதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை. போட்டி நடத்துனர்களும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தாமதம் பற்றி வெளியிட்ட செய்தியில் வீரர்கள் எதிர்ப்பு, சம்பள விவகாரம் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை

டொராண்டோ நேஷனல்ஸ் அணியின் தலைவர் யுவராஜ் சிங் என்பதால் இந்தப் பிரச்சினை மேலும் பரவலானது, யுவராஜ் அணி இந்தப் போட்டியில் வென்றால்தான் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் ஆனால் வீரர்களுக்கு உரிய தொகை போய்ச் சேர வேண்டும் என்பதில் யுவராஜ் அணியை களமிறக்க விருப்பமில்லாதவராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வீரர்கள் எதிர்ப்பலை இந்த இரு அணிகள் மட்டும் தொடர்புடையதல்ல என்று தெரிகிறது, மற்ற அணி வீரர்களும் தங்கள் அணி உரிமையாளர்களிடம் நிலுவை சம்பளம் வழங்கப்படவில்லை எனில் பிளே ஆஃப் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று எதிர்ப்பு காட்டியதாகக் கூறப்படுகிறது.

ஒரு வீரர், கிரிக் இன்போவுக்குக் கூறுகையில், “சம்பளம் வராதவரை களமிறங்க மாட்டோம்” என்றார். இந்தத் தொடரின் வீரர்கள் ஒப்பந்தங்களின் படி தொடர் தொடங்குவதற்கு முன்னரே 15% சம்பளத்தை அளிக்க வேண்டும். முதல் சுற்று முடிந்தவுடன் 75% சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் வீரர்களுக்கு எந்த ஒரு தொகையும் இதுவரை அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT