விளையாட்டு

‘ஹெட்மாஸ்டர்’ போல் செயல்பட்ட மிக்கி ஆர்தர் உட்பட பயிற்சிக்குழு முழுதையும் நீக்க முடிவு: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 

இரா.முத்துக்குமார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தரின் பதவி முடிவுக்கு வருகிறது, இவரோடு பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், பவுலிங் கோச் அசார் மஹ்மூத் ஃபிட்னெஸ் ட்ரெய்னர் கிராண்ட் லூடன் ஆகியோரும் நீக்கப்படுகின்றனர்.

“உடனடியாக மிகவும் அவசரகதியில் அடுத்த பயிற்சிக்குழு தேர்வு செய்யப்படும்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மிக்கி ஆர்தர் தான் இன்னும் 2 ஆண்டுகாலம் நீட்டிக்கப்பட்டால், சர்பராஸ் அகமதுவை கேப்டன்சியிலிருந்து தூக்கினால் பாகிஸ்தான் அணியை வேறொரு தளத்துக்கு உயர்த்திக் காட்டுவேன் என்று அவர் சூளுரைத்ததோடு, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பாபர் ஆஸமும், ஒருநாள், டி20க்கு ஷதாப் கானும் கேப்டனாக வர வேண்டும் என்றார்.

ஒரு பயிற்சியாளர் அணித்தேர்வு கேப்டன் தேர்வு என்று பேசுவது எல்லை மீறலாகும். கொடுக்கின்ற அணியை தயார்படுத்துவதுதான் பயிற்சியாளர் வேலை, பொதுவாகவே பயிற்சியாளர் என்பவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைத் தாண்டியும் பல்வேறு விஷயங்களில் தலையிட்டு வருவது நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் அடுத்ததாக இலங்கைக்கு எதிராக அக்டோபரில் ஆடுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 5 மணி நேர கூட்டம் நடத்தியது இதில் பயிற்சியாளராக மிக்கி ஆர்தரின் பணித்திறன் பற்றி அவரிடம் குடைந்து எடுத்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மிக்கி ஆர்தர் உலக டி20 தொடரில் பாகிஸ்தான் மோசமாக ஆடியதையடுத்து வக்கார் யூனிஸுக்கு அடுத்ததாக பயிற்சியாளராக்கப்பட்டார். மிக்கி ஆர்தர் வந்தவுடனேயே கிரெக் சாப்பல் போல் ‘மெசையா’ ரோலை கையில் எடுத்துக் கொண்டார். பீல்டிங் தரம், வீரர்களின் உடல்தகுதி என்று சிலபல கண்டிப்பான நடைமுறைகளை அமல்படுத்தினார், உமர் அக்மல், மொகமது இர்பான், சொஹைல் கான் ஆகிய வீரர்களை நீக்கினார்.

மிக்கி ஆர்தர் தலைமைப் பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் 10 டெஸ்ட்களில் வென்று 17 போட்டிகளில் தோல்வி கண்டது. ஒரு ட்ரில் மாஸ்டர் போல் செயல்பட்டதால் வீரர்கள் விரைவில் களைப்படைந்தனர், கிரிக்கெட் ஆட்டம் ஒரு கேளிக்கையாக ஆடப்பட வேண்டியது, அதனை மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும், தடகள வீரர்களை சீனா தயார் செய்வது போன்ற மிக்கி ஆர்தரின் பயிற்சி முறைகள் வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு பலன்களும் பெரிய அளவுக்குக் கிடைக்கவில்லை.

மேலும் வீரர்கள் பற்றிய விமர்சனங்களை பத்திரிகைகளில் பேசும் தவறையும் செய்தார் மிக்கி ஆர்தர், இங்கிலாந்துக்கு எதிராக பாபர் ஆஸம் சதம் எடுத்த ஒரு போட்டியில் பாகிஸ்தான் தோற்றது, ஆனால் ஆர்தரோ பாபர் ஆஸமின் ஸ்ட்ரைக் ரேட்தான் தோல்விக்குக் காரணம் என்றார், இப்படியாக அவர் தத்துப்பித்தென்று நடந்து கொண்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை தர்மசங்கடத்துக்குள்ளாக்கியது, அதே போல் சர்பராஸ் அகமெடை நீக்குங்கள் என்று கூறுவது, பீல்டிங் பயிற்சியாலர் ஸ்டீவ் ரிக்சனுக்கு சரிவர சம்பளம் கொடுக்காததால் அவர் விலகினார் இதனால் பீல்டிங் தரம் போய்விட்டது என்றெல்லாம் மீடியாவிடம் அவர் உளறிக்கொட்டிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் தான் பணியை இழப்பதோடு மற்றவர்கள் பணியையும் சேர்த்து எடுத்துக் கொண்டு போய்விட்டார் மிக்கி ஆர்தர்.

SCROLL FOR NEXT