புதுடெல்லி
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என அழைக்கப்படும் ராகுல் திராவிட்டுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்றுவார் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கங்குலியின் கருத்தை வரவேற்றுள்ள ஹர்பஜனும் பிசிசிஐ-யை கடுமையாகச் சாடியுள்ளார்.
ராகுல் திராவிட்டுக்கு எதிராக மத்தியப் பிரதேச கிரிக்கெட் அமைப்பின் உறுப்பினர் சஞ்சய் குப்தா அளித்த புகாரை ஏற்றுக்கொண்டு பிசிசிஐ ஒழுங்குநெறி அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான டி.கே.ஜெயின் இந்த நோட்டீஸை திராவிட்டுக்கு வழங்கியுள்ளார்.
சஞ்சய் குப்தா தனது புகாரில் கூறுகையில், "ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ராகுல் திராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராகவும் இருக்கிறார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்தான் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியை நடத்துகிறது. ஆதலால், பிசிசிஐ விதிமுறைப்படி ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் இருக்கக்கூடாது " எனத் தெரிவித்தார்.
இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ ஒழுங்குநெறி அதிகாரி டி.கே.ஜெயின், 2 வாரங்களுக்குள் ராகுல் திராவிட் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "இந்தியக் கிரிக்கெட்டில் புதிய ஃபேஷன் வந்துள்ளது. செய்திகளில் இடம்பெறவும், புகழ்பெறவும் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விஷயத்தைக் கையில் எடுக்கிறார்கள். இந்தியக் கிரிக்கெட்டுக்கு கடவுள்தான் உதவ வேண்டும். பிசிசிஐ ஒழுங்குநெறி அதிகாரி இரட்டை ஆதாயப் புகார் விவகாரத்தில் ராகுல் திராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்" எனத் தெரிவித்தார்.
கங்குலியின் கருத்தைக் களத்தில் இருக்கும்போதே ஆதரித்துச் செயல்படும் ஹர்பஜன் சிங் ட்விட்டர் கருத்தையும் வரவேற்றுள்ளார். ஹர்பஜன் ட்விட்டரில் கூறுகையில், "உண்மையாகவே, எங்கே போகிறது என்று தெரியவில்லை. இந்திய கிரிக்கெட் திராவிட்டைக் காட்டிலும் சிறந்த மனிதரை இனி பெற முடியாது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது, மிகப்பெரிய லெஜண்ட் ராகுலைப் புண்படுத்துவதாகும். சிறப்பாகச் சேவை செய்தவர்களுக்கு கிரிக்கெட்டும் சேவை செய்யவேண்டும். உண்மைதான், கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டைக் காப்பாற்ற வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக வி.வி.எஸ். லட்சுமண், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் மீது இதுபோன்ற ஆதாயம் தரும் இரட்டைப் பதவி குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது இருவரும் தனித்தனியாக விளக்கம் அளித்தனர். மேலும், ஆதாயம் தரும் பதவியில் இருப்பதாக கருதினால் கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யத் தயார் என சச்சினும், லட்சுமணனும் பதில் அளித்தனர். கங்குலிக்கும் இதேபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதற்கு அவர் விளக்கம் அளித்துவிட்டார்.
பிடிஐ