மே.இ.தீவுகள் அணியை டி20 தொடரில் 3-0 என்று ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி, இதில் தீபக் சாஹர் பிரமாதமாக வீசி 3 விக்கெட்டுகளை 4 ரன்களுக்குக் கைப்பற்றினார். இவரது தொடக்க பந்துவீச்சினால் 14/3 என்று சரிந்த மே.இ.தீவுகள் 200 ரன் பிட்சில் 146 ரன்களையே எடுக்க முடிந்தது.
இந்நிலையில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட தீபக் சாஹர் பற்றி விராட் கோலி ஆட்டம் முடிந்து கூறியதாவது:
சில வீரர்களை முயற்சி செய்தோம் ஆனால் முன்னுரிமை என்பது வெற்றிக்குத்தான். தீபக் உண்மையில் கிரேட். புவனேஷ்வர் குமார் தொழில்நேர்த்தி பவுலர். தீபக் சாஹர் புவனேஷ்குமார் இருவரும் ஒன்று போலவே வீசுகின்றனர். புதிய பந்தில் புவனேஷ்வர் குமார் அளவுக்கு திறமையை தீபக் சாஹரும் வெளிப்படுத்துகிறார். ஸ்விங்தான் இவரது பலம், ஐபிஎல்-ல் கூட அதுதான்.
புதிய பந்தில் அபாயகரமாக வீசுகிறார், பேட்ஸ்மென்களை உண்மையில் பெரிய சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறார். ரிஷப்பந்த்தை எதிர்காலமாகவே பார்க்கிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் அழுத்தங்களை வேறு விதங்களில் சமாளிக்க வேண்டும்.
தொடங்கிய பிறகே ரிஷப் பந்த் தற்போது நீண்ட தொலைவு வந்துள்ளார். அவர் இதே போன்றே சீராக ஆடி அணிக்கு வெற்றியை பினிஷ் செய்து கொடுத்தாரென்றால் நிச்சயம் அவரது திறமை எதிர்காலத்தில் இந்திய அணிக்கு பெரிய வலுவாக அமையும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் வலுவானது. எனவே அது கடினமாக இருக்கலாம். ஆனாலும் ஒரு அணியாக கேளிக்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.