விளையாட்டு

முறைதவறவில்லை என பொலார்ட் மறுப்பு: ஐசிசி அபராதம், தகுதியிழப்புப் புள்ளி

செய்திப்பிரிவு

புளோரிடாவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 போட்டியில் நடுவரின் உத்தரவுகளை மீறிச் செயல்பட்டதற்காக மே.இ.தீவுகள் வீரர் கிரன் பொலார்ட் தண்டிக்கப்பட்டுள்ளார்.

அதாவது அவரது ஆட்டத்தொகையில் 20% அபராதமும் ஒரு தகுதியிழப்புப் புள்ளியும் அவருக்கு விதிக்கப்பட்டது.  ஆனால் பொலார்ட் தன் தவறை மறுத்தார். ஜெஃப் குரோவ் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. 

சம்பவம் என்னவெனில் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பொலார்ட் ஒரு பதிலி வீரரை களத்துக்கு அழைத்தார், ஆனால் இதற்கான வேண்டுகோளை முன்னரே நடுவரிடம் வைக்க வேண்டும், அவர்கள் அனுமதித்த பிறகே பதிலி வீரரை அழைக்க வேண்டும். ஆனால் நடுவர் பலமுறை பொலார்டை அறிவுறுத்தியும் அவர் தொடர்ந்து பதிலி வீரரை அழைத்தார். மேலும் அடுத்த ஓவர் முடியும் வரை காத்திருக்குமாறும் நடுவர் அறிவுறுத்தினர், ஆனால் பொலார்ட் நடுவர்களின் உத்தரவுகளுக்குக் கீழ்படிய மறுத்தார்.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் பொலார்ட் தவறிழைத்தது நிரூபணமாகவே அவருக்கு 20% அபராதமும், 1 தகுதியிழப்புப் புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டது. 

கள நடுவர்கள் நீஜல் டுகிட், கிரிகரி பிராத்வெய்ட், 3ம் நடுவர் லெஸ்லி ரெய்ஃபர், 4வது அதிகாரி பாட்ரிக் குஸ்தார்த் ஆகியோர் பொலார்ட் மீது குற்றச்சாட்டு படித்தனர். 24 மாத காலத்தில் கூடுதலாக 4 தகுதியிழப்புப் புள்ளிகள் பெற்றால் அது போட்டி நீக்க புள்ளிகளாகக் கருதப்பட்டு பொலார்ட் ஓரிரு போட்டிகளுக்கு தடை செய்யப்படலாம்.

ஆனால் பொலார்ட் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

-பிடிஐ.

SCROLL FOR NEXT