விளையாட்டு

2001-க்குப் பிறகு எட்ஜ்பாஸ்டனில் ஆஸி. வெற்றி: லயன் சுழலில் சிக்கி 146 ரன்களுக்குச் சுருண்ட பரிதாப இங்கிலாந்து

செய்திப்பிரிவு

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை அதன் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்குச் சுருட்டிய ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்ரியைப் பெற்று 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. 

ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், கமின்ஸ் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இங்கிலாந்து அணி 13/0 என்று தொடங்கி 53வது ஓவரில் 146 ரன்களுக்குச் சுருண்டது. கிறிஸ் வோக்ஸ் மட்டுமே 37 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். 

எட்ஜ்பாஸ்டனில் 2001-க்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுகிறது, கடைசியாக ஆஷஸ் தொடரை வென்றதும் அதே ஆண்டில்தான். 

உணவு இடைவேளைக்கு முன்பாக ஜேசன் ராய் (28), ஜோ ரூட் (28), டென்லி (11) ஆகியோரை வீழ்த்தி இங்கிலாந்தை நசுக்கிய நேதன் லயன் உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்டோக்ஸ் (6), மொயின் அலி (4), ஸ்டூவர்ட் பிராட் (0) ஆகியோரை வீழ்த்தினார். 

உணவு இடைவேளைக்குப் பிறகு வந்தவுடனேயே ஜோஸ் பட்லர், கமின்ஸ் வீசிய பந்துக்கு முன்காலைப் போட்டு ஆடவில்லை, சற்றே ஷார்ட் பிட்ச் ஆன பந்து ஸ்டம்பைத் தாக்கியது.  ஜானி பேர்ஸ்டோவுக்கு கமின்ஸ் ஒரு ஷார்ட் பிட்ச் அதிர்ச்சிப் பந்தை வீச அதை மேலும் அதிர்ச்சிகரமாக ஆடிய பேர்ஸ்டோ ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரிவியூவும் பயனளிக்காமல் 6 ரன்களில் வெளியேறினார். இது கமின்சின் 100வது டெஸ்ட் விக்கெட். 

இதற்கு அடுத்த ஓவர் முதல் பந்தில் பென் ஸ்டோக்ஸ் 28 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகித் திரும்ப எட்ஜ் ஆகி பெய்னிடம் கேட்ச் ஆனது. மொயின் அலி 4 ரன்களுக்கு 28 பந்துகள் தடவ இன்னொரு முனையில் கிறிஸ் வோக்ஸ் சிலபல பவுண்டரிகளைச் சாதித்தார் இருவரும் சேர்ந்து 39 ரன்களைச் சேர்த்தனர்.  மொயின் அலி 4 ரன்களில் லயனின் பெரிய ஸ்பின் பந்துக்கு கல்லியில் வார்னரிடம் கேட்ச் ஆனார். அடுத்த பந்தே பிராடும் எட்ஜ் ஆகி வெளியேற லயன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

கடைசியில் கிறிஸ் வோக்ஸ் 37 ரன்களில் கமின்சின் ஸ்லோ பவுன்சருக்கு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேற இங்கிலாந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆட்ட நாயகனாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அடுத்த டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெறுகிறது. 

SCROLL FOR NEXT