எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் 398 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 5ம் நாளான இன்று ஆடிவரும் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
உணவு இடைவேளையின் போது ஜோஸ் பட்லர் 1 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
இன்று 13/0 என்று தொடங்கிய இங்கிலாந்து முதலில் ரோரி பேர்ன்ஸ் (11) விக்கெட்டை கமின்ஸ் வீழ்த்தினார். பந்து சற்றே மேலெழும்பி வர பர்ன்ஸின் மட்டையில் பட்டு கல்லியில் லயனிடம் கேட்ச் ஆனது.
ஜேசன் ராய், ஜோ ரூட் அணியின் ஸ்கோரை 60 ரன்களுக்குக் கொண்டு சென்ற போது ஜேசன் ராய் 28 ரன்கள் எடுத்து பொறுமையில்லாமல் நேதன் லயன் பந்தை மேலேறி வந்து ஒரு சுழற்று சுழற்ற பந்து மட்டையில் சிக்காமல் ஸ்டம்பைத் தாக்கியது. 28 ரன்களில் ஜேசன் ராய் ஆட்டமிழந்தார்.
ஜோ ரூட் 28 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்து ஒன்று ஸ்பின் ஆகி மட்டையின் உள் விளிம்பில் பட ஷார்ட் லெக்கில் பேங்கிராப்ட்டிடம் கேட்ச் ஆக மிகப்பெரிய விக்கெட் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டியது.
ஜோ டென்லி 11 ரன்களில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு நேதன் லயன் பந்தில் பேங்கிராப்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
நேதன் லயன் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நேதன் லயன் அச்சுறுத்தல் இறுதி நாளில் உண்டு என்று ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் டாஸ் போடும் போதே கூறினார்.
இப்போது அது உண்மையானது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஜோஸ் பட்லர் கமின்ஸ் பந்தில் பவுல்டு ஆனார். 85/5 என்று இங்கிலாந்து தடுமாறி வருகிறது.
ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ ஆடி வருகின்றனர்.