பிரிதிவி ஷா :படம் பிடிஐ 
விளையாட்டு

8 மாதத் தடை அதிர்ச்சியா இருக்கு; எல்லாம் என் விதி: பிரிதிவி ஷா வேதனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

ஊக்கமருந்து விவகாரத்தில் 8 மாதங்கள் கிரிக்கெட் விளையாட  பிசிசிஐ விதித்த தடை எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எல்லாம் விதிதான் இதை ஏற்கிறேன் என்று வளரும் இளம் வீரர் பிரிதிவி ஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 22, 2019-ல் சையத் முஷ்டாக் அலி ட்ராபி போட்டிகளின் போது பிரிதிவி ஷாவுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. அவரின்  சிறுநீர் மாதிரியில் தடை செய்யப்பட்ட ‘டெர்புடலின்’ என்ற மருந்து இருந்துள்ளது.

பிரிதிவி ஷா மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகளுக்காக இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதில் இந்த டெர்புடலைன் இருந்தது. இந்த மருந்தை அவர் கவனக்குறைவாகத் தெரியாமல் எடுத்துக் கொண்டிருக்கலாம்.  இது சர்வதேச ஊக்கமருந்து தடை அமைப்பினால் (வாடா) தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தாகும். 

இதையடுத்து தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பிரிதிவி ஷா எடுத்துக்கொண்டதால் 8 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடைவிதித்து பிசிசிஐ நேற்று உத்தரவிட்டது. இதை முன்தேதியிட்டு கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதாகவும், தடையின் காலம் நவம்பர் 15-ம் தேதி முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தடை குறித்து இளம் வீரர் பிரிதிவி ஷா கூறுகையில், " மிகவும் உண்மையுடன் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நான் ஏற்கிறேன். எல்லாம் என் தலைவிதி. இப்போதும்கூட நான் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறேன், பிசிசிஐ அளித்த தண்டனை என்னை உலுக்கிவிட்டது. 


விளையாடும் வீரர்கள் உடல்நலக்குறைவால் எடுக்கும் மருந்துகளில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் ஏதேனும் கலந்திருக்கிறதா என்பதைக் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும், எப்போதும் விளையாட்டு வீரர்கள் முறையான விதிகளைக் கடைபிடிப்பது, கவனத்துடன் இருப்பது அவசியம்.

நான் ஆஸ்திரேலியா தொடருக்குச் சென்றபோது அங்கு எனக்குக் காலில் காயம் ஏற்பட்டு இந்தியா திரும்பினேன். அதன்பின், விளையாட வேண்டும் என ஆசையோடு பல்வேறு பயிற்சிகளில் இறங்கினேன், அப்போது, உடல்நலக் குறைவால் இதுபோன்ற தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகளை தெரியாமல் எடுத்துவிட்டேன்.

கிரிக்கெட்தான் என்னுடைய வாழ்க்கை. இந்தியாவுக்காகவும், மும்பைக்காகவும் விளையாடுவதைக் காட்டிலும் மிகப்பெரிய பெருமை, கவுரவம் வேறு ஏதும் எனக்கு இல்லை. இந்தத் தடையில் இருந்து வெளியே வரும்போது இன்னும் வலிமையாகவும், வேகமாகவும் நான் இருப்பேன்" என்று பிரிதிவி ஷா தெரிவித்தார்.

பிடிஐ

SCROLL FOR NEXT