ஐசிசி உயர்மட்ட நடுவர் குழுவிலிருந்து இந்திய நடுவர் எஸ்.ரவி நீக்கப்பட்டார். இயன் கோல்டு ஓய்வு பெற்ற நிலையில் புதிய நடுவர்களாக இங்கிலாந்தின் மைக்கேல் காஃப், வெஸ்ட் இண்டீஸின் ஜோயெல் வில்சன் ஆகியோர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலகக்கோப்பையின் போது இயன் கோல்டு நடுவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் 2015-ல் உயர்மட்டக் குழுவில் சேர்க்கப்பட்ட இந்திய நடுவர் எஸ்.ரவி குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
ஐசிசி உயர்மட்ட மேட்ச் ரெஃப்ரீக்கள் குழுவில் மாற்றமில்லை.
புதிதாகச் சேர்க்கபட்ட மைக்கேல் காஃப் முன்னாள் டர்ஹாம், இங்கிலாந்து ஏ அணி வீரராவார். இவர் ஒரு பேட்ஸ்மேன். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகள் 59 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 14 டி20 சர்வதேச போட்டிகளில் நடுவர் பணியாற்றியிருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் நடுவர் வில்சன் 13 டெஸ்ட், 63 ஒருநாள் மற்றும் 26 டி20 சர்வதேசப் போட்டிகளில் அவர் நடுவராக பணியாற்றியுள்ளார்.
எஸ்.ரவியை நீக்கியதற்கான எந்த வித குறிப்பிட்ட காரணங்களையும் ஐசிசி குறிப்பிடாவிட்டாலும், அவர் மீது சர்ச்சைகள் இருந்து வந்தன. இலங்கை அணிக்கு இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட தொடரில் பல நோ-பால்களை இவர் பார்க்கவே இல்லை என்ற புகார்கள் எழுந்தன. ஐபிஎல் கிரிக்கெட்டில் லஷித் மலிங்காவின் நோ-பாலை பார்க்காமல் விட்டது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியது. கோலியே ‘முட்டாள்தனமானது’ என்று இதை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போடு ஐசிசி உயர்மட்ட நடுவர் குழுவில் ஒரு இந்திய நடுவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் அலீம் தார், இலங்கையின் குமார் தர்மசேனா ஆகியோர் நீடிக்கின்றனர்.