விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஸ்டெயின், டுமினி அபாரம்; வங்கதேசம்- 246/8

ஏஎஃப்பி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் விக்கெட் கீப்பர் டி.ஜே.விலாஸ் அறிமுக வீரராக களம் கண்டார். டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணியில் தமிம் இக்பால் 6 ரன் களில் நடையைக் கட்ட, இம்ருள் கெய்ஸுடன் இணைந்தார் மோமினுல் ஹக். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. மோமினுல் ஹக் 40, கெய்ஸ் 30 ரன்களில் வெளியேறினர்.

முஷ்பிகுர் ரஹிம் 65

இதன்பிறகு மகமதுல்லா-கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. முஷ்பிகுர் ரஹிம் 79 பந்துகளில் அரை சதமடிக்க (15-வது அரை சதம்), மகமதுல்லா 35 ரன்களில் வெளியேறினார். இதை யடுத்து அல்ஹசன் களமிறங்க, 125 பந்துகளைச் சந்தித்த முஷ்பிகுர் ரஹிம் 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு லிட்டன் தாஸ் 3 ரன்களிலும், அல்ஹசன் 35 ரன்களிலும், முகமது ஷாஹித் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேசம். நாசிர் ஹுசைன் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார். மழையால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் நேற்று 88.1 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டெயின் 16.1 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், டுமினி 15 ஓவர்களில் 27 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஸ்டெயின் 400 விக்கெட்

நேற்றைய ஆட்டத்தில் வங்கதேச தொடக்க வீரர் தமிம் இக்பாலை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது தென் ஆப்பிரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார் டேல் ஸ்டெயின். முதல் தென் ஆப்பிரிக்கர் ஷான் பொல்லாக் ஆவார். அவர் 421 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச அளவில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 13-வது வீரர் டேல் ஸ்டெயின் ஆவார். 32 வயதான ஸ்டெயின் தனது 80-வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். தற்போது விளையாடி வரும் வீரர்களில் 400 விக்கெட் வீழ்த்தியிருக்கும் 3-வது நபர் ஸ்டெயின். இந்தியாவின் ஹர்பஜன் சிங், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் மற்ற இருவர்.

SCROLL FOR NEXT