லண்டன்,
ஆகஸ்ட் 1-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தொடங்கும் பாரம்பரிய ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் தொடருக்கு அறிமுகமாகிறார். துணை கேப்டன் பொறுப்பு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாரம்பரியம் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் முதல் போட்டி தொடங்குகிறது. லண்டனில் நடந்த உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டத்தில் பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சரும், பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸும் கலக்கினர். கோப்பையை வெல்வதற்கு இருவரின் ஆட்டம் முத்தாய்ப்பாக அமைந்தது.
உலகக்கோப்பைக்கு முன்பாகத்தான் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்ட ஆர்ச்சர் தனது சிறப்பான பந்துவீச்சால் உலகக்கோப்பையிலும், தற்போது டெஸ்ட் அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
உலகக்கோப்பை போட்டிக்குப் பின், சிறிதுகாலம் தனது சொந்த நாடான பர்படாஸுக்குச் சென்றுவிட்டு வந்த ஆர்ச்சர் மீண்டும் சசெக்ஸ் அணியில் இடம் பெற்று டி20 போட்டியில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஃபார்முக்குத் திரும்பினார்.
இதற்கு முன் ஜோய் ரூட்டிடம் இருந்த துணை கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, பென் ஸ்டோக்ஸிடம் இந்த முறை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு லண்டனில் பாரில் மது போதையில் ஸ்டோக்ஸ் ரகளையில் ஈடுபட்டதால், அவரின் துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஸ்டோக்ஸுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டது.
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கி 92 ரன்கள் சேர்த்து அசத்திய இடதுகை சுழற்பந்துவீ்ச்சாளர் ஜாக் லீச் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
இங்கிலாந்து அணி விவரம்:
ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்ஸன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட்பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரன், ஜோய் டென்லி, ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஓலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.