ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற லசித் மலிங்கா: படம் உதவி ஐசிசி 
விளையாட்டு

கடைசிப் பந்தில் 'யார்கரில்' விக்கெட் வீழ்த்தி விடைபெற்ற மலிங்கா

செய்திப்பிரிவு

கொழும்பு, 
ஓய்வு அறிவிப்புக்குப்பின், தனது கடைசி ஓவரில் தனக்கே உரிய ஸ்டைலில் யார்கர் வீசி விக்கெட் வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளும், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டுமான  லசித் மலிங்கா ஓய்வு பெற்றார்.

மலிங்கா, பிரதீப்பின் வேகப்பந்துவீ்ச்சு, பெரேராவின் சதம் ஆகியவற்றால், கொழும்பு நகரில் நேற்று நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. ஆட்டநாயகன் விருதை குஷால் பெரேரா பெற்றார். 

முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. 315 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 41.4 ஓவர்களில் 223 ரன்களில் ஆட்டமிழந்து, 91 ரன்களில் தோல்வி அடைந்தது.

இலங்கை வேகப்பந்துவீச்சாளரும், யார்கர் மன்னன் என்று அழைக்கப்படுபவருமான லசித் மலிங்கா நேற்றைய ஆட்டத்தோடு ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். 9.4 ஓவர்கள் வீசிய மலிங்கா 2 மெய்டன்கள் 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

2004-ம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான மலிங்கா, இதுவரை 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கை வீரர்கள் முத்தையா முரளிதரன்(523), சாமிந்தா வாஸ்(399) ஆகியோருக்குப்பின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மலிங்கா என்பது குறிப்பிடத்தக்கது. 

338 விக்கெட்டுகளை மலிங்கா வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேயின் 337 விக்கெட்டுகள் சாதனையையும் மலிங்கா முறியடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் மலிங்கா மட்டுமே ஆவார். அதிகபட்சமாக 2011-ம் ஆண்டு ஐசிசி தரவரிசையில் 7-வது இடம் வரை முன்னேறினார். 

இலங்கை அணியின் நேற்றைய வெற்றி மலிங்கா, பிரதீப்பின் பந்து வீச்சு எந்த அளவுக்கு காரணமோ, அதே அளவுக்கு பெரேராவின் சதமும் முக்கியக் காரணமாகும். 

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. கருணாரத்னே, பெர்னாண்டோ ஆட்டத்தைத் தொடங்கினாலும் இந்த ஜோடி நிலைக்கவில்லை. பெர்னான்டோ 7 ரன்னில் ஆட்டமிழந்தார். 

3-வது விக்கெட்டுக்கு வந்த பெரேரா, கருணாரத்னேயுடன் சேர்ந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கருணாரத்னே 36 ரன்களில் ஆட்டமிழ்ந்தார். 

அடுத்து வந்த மெண்டிஸ், பெரேராவுடன் சேர்ந்தார். மெண்டிஸ் பொறுமையான ஆட, பெரேரா அதிரடியாக ஆடினார். இருவரும் சேர்ந்து வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துகளை அனாசயமாக சமாளித்து விளையாடி ரன்களைச் சேர்த்தனர். பெரேரா 38 பந்துகளில் அரைசதமும், 82 பந்துகளி்ல் சதத்தையும் பதிவு செய்தார்.

3-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 100 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். குஷால் பெரேரா 111 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் ஒரு சிக்ஸர், 17பவுண்டரிகள் அடங்கும். 

மெண்டிஸ் (43), மாத்யூஸ்(48), திரிமானே(25) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் சேர்த்தது. மலிங்கா 6 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்கதேச தரப்பில் சைபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், முஷ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 315 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. மலிங்காவும், பிரதீப்பும் சேர்ந்து தொடக்கத்திலேயே வங்கதேச பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தனர். 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் அணி தடுமாறியது.

தமிம் இக்பால்(0),சவுமியா சர்க்கார்(15) முகமது மிதின்(10),முகமதுல்லா(3) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.  வங்கதேசம் தரப்பில் முஷ்தபிசுர் ரஹிம் 67, சபிர் ரஹ்மான் 60 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் யாரும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ரன்கள் சேர்க்கவில்லை.

182 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்த வங்கதேசம் அணி, அடுத்த 18 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 
லசித் மலிங்கா தனது கடைசி ஓவரையும் அணிக்காக 42 ஓவரையும் வீசினார். யார்கராக தனக்கே உரிய ஸ்டைலில் மலிங்கா 5-வது பந்தை முஷ்தபிசுர் ரஹ்மானுக்கு வீசினார்.

அதை மிட்ஆஃப் திசையில் ரஹ்மான் தூக்கி அடிக்க அது திசாரா கைகளில் கேட்ச் ஆனது. மலிங்கா தனது கடைசி ஓவரில் கடைசி பந்தில் விக்கெட்டை வீழ்த்தி விடைபெற்றார். 41.4 ஓவர்களில் 223 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழந்து 91 ரன்களில் தோல்வி அடைந்தது. இலங்கை தரப்பில் பிரதீப், மலிங்கா தலா 3 விக்கெட்டுகளையும், டிசில்வா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்த ஓய்வு பெற்றது குறித்து மலிங்கா கூறுகையில், " என்னுடைய கேப்டன்கள் அனைவரும் நான் அதிகமாக விக்கெட் வீழ்த்த வேண்டும் என எதிர்பார்த்தார்கள். என் கிரிக்கெட் வாழ்க்கையில் என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டேன்.  அடுத்து வரக்கூடிய இளம் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன் " எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT