விராட் கோலி, இமாத் வாசிம். | ராய்ட்டர்ஸ். 
விளையாட்டு

இந்தியா வேண்டுமென்றே தோற்கும்: ‘பொறுப்பற்ற’ கருத்தினால் பதவியை இழக்கும் பாஸித் அலி

செய்திப்பிரிவு

2019 உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்ற போது அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்புகள் கூடுதலாக சில அணிகளுக்கு இருந்தன, பாகிஸ்தான் அணிக்கும் அரையிறுதி வாய்ப்பு ஒருகட்டத்தில் இருந்தது. 

ஆனால் அப்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி, வர்ணனையில், “இங்கிலாந்து மற்றும் பிற அணிகளுடன் இந்தியா வேண்டுமென்றே தோற்று பாகிஸ்தான் அரைஇறுதிக்கு முன்னேறாமல் பார்த்துக் கொள்ளும்” என்று கூறியது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விஷயத்தை பொறுப்புடன் அணுகுவதாகத் தெரிவித்துள்ளதோடு, கராச்சி மண்டல அணிக்கு அவரைப் பயிற்சியாளராக நியமிக்கும் முடிவையும் மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

“பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாஸித் அலியிடம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது அவர் ஒரு டெஸ்ட் வீரராக இருந்தவர், வாரியத்துடன் பல்வேறு திட்டங்களில் அவர் இருந்துள்ளார், ஆகவே இதுமாதிரியான பொறுப்பற்ற அலட்சிய கருத்துகளை அவர் கூறுவதை தவிர்க்க வேண்டுமென்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவரது அந்தக் கருத்தினால் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது என்றும் இப்படிப்பட்ட ஆதாரமற்ற கருத்துகளை அவர் கூறுவதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது” என்று பிசிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் கராச்சி பிராந்திய அணியின் பயிற்சியாளராக அவரை நியமிப்பதையும்  மறுபரிசீலனை செய்யவுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

ஏற்கெனவே பாஸித் அலி முன்னாள் பேட்ஸ்மென் மொகமது ஹமீத் என்பவரை அடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்த போது பாஸித் அலி அதனை மறுத்து பிறகு ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT