கொழும்பு: இளைஞர்களுக்கு வழிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான லஷித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லஷித் மலிங்கா, வங்கதேச அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் 50 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில் நேற்று அணியின் இறுதிக்கட்ட பயிற்சியில் பங்கேற்ற மலிங்கா கூறுகையில்,“இந்த நேரத்தில் ஓய்வு பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. புதிய வீரர்கள் தங்களை நிரூபிக்கவும், அடுத்த உலகக் கோப்பை தொடருக்கு தயாராகவும் இது நல்ல வாய்ப்பாகும். ஒரு அணியாக எங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் மற்றுமொறு உலகக் கோப்பையை வெல்வதற்கான திறனை கொண்டுள்ளோம். ஏற்கெனவே நாங்கள் 1996-ம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை, 2014-ல் டி 20 உலகக் கோப்பை ஆகியவற்றில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளோம்.
இளம் வீரர்கள் தங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதும் அவசியம். களத்தில் தேவையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
35 வயதான மலிங்கா கடந்த 2004-ம் ஆண்டு தம்புலாவில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுகமாகியிருந்தார். 225 ஆட்டங்களில் விளையாடி அவர், 335 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் கைப்பற்றிய இலங்கை வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார் மலிங்கா. டெஸ்ட் போட்டிகளில் கடந்த 2011-ம் ஆண்டே ஓய்வு பெற்றிருந்தார். இரு வடிவிலான ஆட்டங் களிலும் ஓய்வு பெற்ற போதிலும் டி 20-ல் தொடர்ந்து விளையாட உள்ளார் மலிங்கா.