அர்ஜெண்டீனா கால்பந்து அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி மீது கோப்பா அமெரிக்கா கால்பந்து ரெட் கார்டு தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தடையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு போட்டியில் ஆடத் தடையும், 1,500 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. தென் அமெரிக்க கால்பந்து நிர்வாகிகள் மீது ‘ஊழல்’ குற்றச்சாட்டுகளை மெஸ்ஸி அடுக்கியதற்காகவும் கோப்பா அமெரிக்கா 3ம் இடத்துக்கான பிளே ஆஃப் போட்டியில் சிலிக்கு எதிராக அர்ஜெண்டினா வென்ற போட்டியில் கேரி மெடெலுடன் மோதல் போக்கை கடைபிடித்ததற்காகவும் ஒரு போட்டி தடை மற்றும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் பிரேசில் வெற்றி பெறுவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெஸ்ஸி குற்றம் சாட்டியது மிகவும் சீரியஸாக அணுகப்படுவதாக தென் அமெரிக்க கால்பந்து நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அரையிறுதியில் பிரேசிலிடம் அர்ஜெண்டீன தோற்று வெளியேறியது.
இந்நிலையில் தென் அமெரிக்க கால்பந்து கழகம் ஒரு ஊழல் அமைப்பு என்று குற்றம்சாட்டி தன் பதக்கத்தை வாங்க அவர் நிகழ்சிக்கு வராமல் புறக்கணித்தார்.
2022 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியின் போது மெஸ்ஸி தடை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.