லண்டன்,
நியூஸிலாந்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு தகுதியானவர் கேன் வில்லியம்ஸன்தான், என்னுடைய ஓட்டும் அவருக்குத்தான் எனக் கூறி நியூஸிலாந்து அளிக்க இருக்கும் விருதை பணிவுடன் பென் ஸ்டோக்ஸ் மறுத்துவிட்டார்.
ஐசிசியின் 12-வது உலகக் கோப்பை சாம்பியனாக இங்கிலாந்து மூடிசூடியது. இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து நிர்ணயித்த 241 ரன்களைத் துரத்திய இங்கிலாந்து 241 ரன்கள் சேர்த்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் ஒரே அளவான 15 ரன்களை எட்டியதால் போட்டி சமனில் முடிந்தது.
ஆனால், ஆட்டத்தில் அதிகமான பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.
இதில் பென் ஸ்டோக்ஸ்தான் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஸ்டோக்ஸ் 84 ரன்களும், சூப்பர் ஓவரில் 8 ரன்களும் சேர்த்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
இங்கிலாந்து கோப்பையை வென்றபின் அந்த அணி வீரர் பென் ஸ்டோக்ஸின் விளையாட்டு அனைவராலும் பாராட்டப்பட்டது. நியூஸிலாந்தில் பிறந்தவரான பென் ஸ்டோக்ஸ் அதற்குபின் இங்கிலாந்து சென்று அந்த நாட்டுக்காக விளையாடினார்.
இதனால், நியூஸிலாந்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கும் பென் ஸ்டோக்ஸ் பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில், நியூஸிலாந்து சார்பில் தனக்கு அளிக்கப்பட இருக்கும் விருதை பென் ஸ்டோக்ஸ் மிகவும் பணிவுடன் மறுத்துள்ளார். இந்த விருதுக்கு தகுதியானவர் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் என்று தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
நியூஸிலாந்து நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டது என்னை பெருமைப்படுத்துகிறது. என்னுடைய நியூஸிலாந்தையும், பாரம்பரியம் கொண்ட மவுரி இனத்தவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன்.
ஆனால், கவுரவம்மிக்க அந்த விருதுக்கு உகந்தவர் நான் இல்லை. நியூஸிலாந்து நாட்டுக்காக ஏராளமான சாதனைகளைச் செய்தவர்கள்தான் இந்த அங்கீகாரத்துக்கு தகுதியானவர்கள்.
இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்ல நான் உதவி இருக்கிறேன். நான் 12 வயதில் இருந்து இங்கிலாந்து நாட்டுக்காக என் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸனுக்குதான் அந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவு அளிப்பார்கள் என்று நான் உணர்கிறேன்.
நியூஸிலாந்து மக்களின் போற்றதலுக்குரியவராக வில்லியம்ஸன்தான் இருக்க வேண்டும். உலகக் கோப்பையில் நியூஸிலாந்து அணியை சிறப்பாக வழிநடத்தி மேன்மையான இடத்துக்கு கொண்டுவந்து மிகப்பெரிய பெருமையை வில்லியம்ஸன் சேர்த்துள்ளார். வில்லியம்ஸன்தான் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார், இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாகவும் இருப்பார்.
மைதானத்தில் ஒவ்வொரு சூழலிலும் மற்றவர்களின் உணர்வுகளை அறிந்து செயல்படுதல், பணிவாக இருத்தல் என அனைத்திலும் சிறந்த மனிதராக வில்லியம்ஸ் விளங்கினார். நியூஸிலாந்து நாட்டின் உதாரணமாக வில்லியம்ஸன் இருந்தார்.
நியூஸிலாந்து அளிக்கும் விருதுக்கு தகுதியானவராக வில்லியம்ஸன் இருப்பார். அவருக்கு நியூஸிலாந்து மக்கள் முழுமையாக ஆதரவு தருகிறார்கள். விருதுக்கு தகுதியானவர் வில்லியம்ஸன்தான். என்னுடைய ஓட்டும் வில்லியம்ஸனுக்கே.
இவ்வாறு ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.