ஆக்லாந்து, பிடிஐ
என் வாழ்வில் சிறந்த நாளும், மோசமான நாளும் உலகக்கோப்பை இறுதி ஆட்டமாகத்தான் இருக்கும் என்று நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் இங்கிலாந்துக்கு தேவைப்பட்டது. டிரன்ட் போல்ட் பந்துவீச களத்தில் ஸ்டோக்ஸ், ரஷித் இருந்தனர். ஸ்டோக்ஸ் தான் சந்தித்த 2 பந்துகளில் ரன் ஏதும் அடிக்கவில்லை.
3வதுபந்தில் ஸ்டோக்ஸ் மிட்விக்கெட்டில் காலை மடக்கிக்கொண்டு அபாரமான சிக்ஸரை அடித்தார். 4-வது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, கப்தில் பீல்டிங் செய்து விக்கெட் கீப்பருக்கு எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில், பாய்ந்தபோது அவரின் பேட்டில் பந்து ஓவர் த்ரோவாக பவுண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ரன்கள் கிடைத்தன.
இந்த ஓவர் த்ரோதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை முழுமையாக ஓடி முடிக்காத காரணத்தால், 5 ரன்கள் மட்டுமே நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6 ரன்கள் வழங்கி நடுவர் தர்மசேனா தீர்ப்பு வழங்கினார். இதனால், கடைசியில் ஆட்டம் டிராவில் முடியும் நிலை ஏற்பட்டது. அதன்பின் சூப்பர் ஓவரிலும் போட்டி டிராவில் முடிந்ததால், அதிகமான பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில், இங்கிலாந்துக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால், நியூஸிலாந்து தோற்கவில்லை.
இறுதிப்போட்டி முடிவு குறித்து நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவி்ட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், " லண்டன் லாட்ஸ் மைதானத்தில் மனதில் நிற்கும் உலகக் கோப்பை இறுதிஆட்டத்தை நம்புவதற்கே கடினமாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இறுதிஆட்டம் நடந்த அந்த நாள்தான் என் கிரிக்கெட் வாழ்வில் சிறந்த நாள், அதுவே மிக மோசமான நாள். பல்வேறுவிதமான உணர்வுகள் அன்றைய தினம் வெளிப்பட்டன. ஆனால், நியூஸிலாந்து அணிக்காக நான் விளையாடியது, என்னுடைய சக வீரர்களுடன் இணைந்து நியூஸிலாந்து அணிக்காக விளையாடிய தருணம் எனக்கு பெருமையானது. எனக்குஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி, மிகவும் வியப்புக்குரிய தருணம்" எனத் தெரிவித்துள்ளார்.