விளையாட்டு

உலகக்கோப்பை இறுதிப் போட்டி ‘டை’ ஆன போது என்ன செய்திருக்க வேண்டும்: இயன் சாப்பலின்  ‘வித்தியாசமான’ஆலோசனை

செய்திப்பிரிவு

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதான முடிவின் மீதான சர்ச்சைகள் இன்னும் அடங்கியபாடில்லை, நடுவர் தர்மசேனா 6 ரன்கள் ஓவர் த்ரோ விவகாரத்தில் தான் தவறிழைத்ததாகக் கூறினார். 

பலரும் தங்கள் கண்டனங்களையும் கருத்துகளையும் தெரிவித்து வருகையில், சமீபத்தில் சரும புற்று நோயில் இருந்து மீண்ட முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்  மேதை இயன் சாப்பல் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்காக எழுதிய கட்டுரையில் வித்தியாசமான பரிந்துரையை மேற்கொண்டுள்ளார்:

“உலகக்கோப்பை இறுதிப் போட்டி டை ஆகும் போது இறுதியில் போட்டியிட்ட இரு அணிகள் லீக் சுற்றுப் போட்டி முடிவுகளில் அட்டவணையில் எந்த நிலையில் இருந்தது என்று பார்த்து அந்தப் பட்டியலில் இந்த இரு அணிகளில் மேலே இருந்த அணிக்கு கோப்பையை வழங்குவதுதான் குறைந்த சர்ச்சைக்குரிய முடிவாகும். 

அதாவது இறுதிக்குத் தகுதி பெற்ற இரு அணிகள் லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையிலோ அல்லது அதிலும் சமமாக இருந்தால் நிகர ரன் விகிதத்தில் அதிகமாக இருந்த அணியையோ கோப்பையை வென்றதாக தேர்வு செய்வதே சிறந்தது. இதில் சர்ச்சைக்கு வாய்ப்பிருந்தாலும் குறைந்த அளவனா சர்ச்சையே ஏற்படும். 

சூப்பர் ஓவர் வின்னரைத் தீர்மானிக்கவில்லையெனில் இதுதான் சிறந்த முடிவு. இந்த முறையைக் கையாண்டிருந்தாலும் இங்கிலாந்துதான் வெற்றி பெற்றிருக்கும். மேலும் லீக் சுற்றில் நியூஸிலாந்தை இங்கிலாந்து எளிதாக வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. 

டி.ஆர்.எஸ். முறை இந்த உலகக்கோப்பையில் கடும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது, முதலில் டி.ஆர்.எஸ். முறையை கேப்டன்கள், வீரர்கள் கையிலிருந்து பறிப்பது நல்லது, அது ஐசிசி நடுவர்கள் கையில் இருப்பதுதான் சிறந்தது. மேலும் தொழில்நுட்பம் முழுதும் ஐசிசி கையில் இருக்க வேண்டுமே தவிர நிகழ்வை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருக்கக் கூடாது.” என்றார் இயன் சாப்பல்.

SCROLL FOR NEXT