அடங்கிய ஆஷஸ் தீ மீண்டும் பல்வேறு விதங்களில் மூட்டப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பர்மிங்ஹாம் மதுபான விடுதி ஒன்றில் தாக்கினார்.
இதற்கு வார்னர் கூறிய காரணம் என்னவெனில், வார்னர் நண்பரிடமிருந்து ‘விக்’ ஒன்றை பிடுங்கிய ஜோ ரூட் அதனைத் தனது கன்னத்தில் தாடியாக ஒட்டிக்கொண்டார். இது தென் ஆப்பிரிக்க்க வீரர் ஹஷிம் ஆம்லாவின் தாடியை கேலி செய்வது போல் இருந்தது, இதனால்தான் ஜோ ரூட்டைத் தாக்கினேன் என்றார் வார்னர்.
இதனையடுத்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக ஜோ ரூட், இரண்டு ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில், "என்னுடைய நற்பண்பை கேள்விக்குட்படுத்தியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. என்னை நன்றாக அறிந்தவர்களுக்குத் தெரியும் வார்னர் என்னைத் தாக்கியதற்கு கூறிய காரணம் எத்தனை நகைப்புக்குரியது என்று..
ஆனால் அவர் இதன் மூலம் தன் நடத்தைக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறார். நான் ஆஷஸ் தொடருக்காக காத்திருக்கிறேன்" என்று ரூட் பதிலளித்துள்ளார்.