நோவ் மெஸ்டோ, பிடிஐ
செக் குடியரசு நாட்டில் நடந்த தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் நேற்று தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த ஜூலை மாதத்தில் ஹிமா தாஸ் வெல்லும் 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
செக் குடியரசு நாட்டில் உள்ள பராக் நகரில் சர்வதேச தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் இந்திய சார்பில் 400 மீட்டர் ஓட்டத்தில் வீராங்கனை ஹிமா தாஸ் பங்கேற்றார். இதில் நேற்று நடந்த மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில், பந்தையத் தொலைவை 52.09 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை ஹிமா தாஸ் வென்றார்.
ஹிமா தாஸ் இதற்கு முன்னர் ஜகார்தா ஆசியப் போட்டியில் 50.79 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தாலும், அதைக்காட்டிலும் இது 2 வினாடிகள் கூடுதலாகவே எடுத்துக்கொண்டார்.
மேலும், 51.80 வினாடிகளில் ஹிமா தாஸ் பந்தையத் தொலைவைக் கடந்திருந்தால், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கலாம் அதை ஹிமா தாஸ் இழந்துவிட்டார்.
கடந்த 2-ம் தேதியில் இருந்து ஹிமா தாஸ் ஐரோப்பா கண்டத்தில் வெல்லும் 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன் கடந்த 2-ம் தேதி போலந்தில் நடந்த போஸ்னன் அத்தலெட்டிக் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 200 மீ ஓட்டத்தில் 23.65 வினாடிகளில் கடந்த முதல் தங்கம் வென்றார்.
அடுத்ததாக, 7-ம் தேதி போலந்தில் குட்னோ தடகளப் போட்டியல் 200 மீ ஓட்டத்தில் 23.97 வினாடிகளில் பந்தைய தொலைவைக் கடந்து 2-வது தங்கப் பதக்கத்தை ஹிமா தாஸ் கைப்பற்றினார்.
அதன்பின், செக்குடியரசில் கிளாட்னோ அத்தெலடிக் மீட் போட்டியில் 200 மீ ஓட்டத்தில் ஹிமா தாஸ் தங்கமும், செக் குடியரசில் கடந்த புதன்கிழமை நடந்த தபூர் தடகளப் போட்டியில் 200 மீ ஓட்டத்தில் 23.43 வினாடிகளில் பந்தைய தொலைவைக் கடந்து ஹிமா தங்கம் வென்றிருந்தார்.
ஆக கடந்த 2-ம் தேதியில் இருந்து ஹிமா தாஸ் 5-வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான ஹிமா தாஸ்
" திங் எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படுகிறார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதுகு வலி காரணமாக சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.