ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் பவுன்சரில் தலையில் அடிவாங்கி பரிதாபமாக இறந்த சம்பவம் மற்றும் சில போட்டிகளில் தலையில் அடிபட்டோ அல்லது வேறு தீவிர காயங்களினால் வீரருக்கு அதிர்ச்சியோ குழப்பமோ ஏற்பட்டு விளையாட முடியாது போனால் அந்த வீரர்களுக்குப் பதிலாக வேறு வீரரை இறக்கி பேட்டிங், பவுலிங் செய்ய ஐசிசி புதிய விதிமுறை அனுமதியளிக்கிறது.
2017-ல் ஐசிசி இது போன்ற பதிலி வீரர்களை சோதனை முறையாக சிலபல உள்நாட்டு போட்டிகளில் 2 ஆண்டுகளுக்குச் செய்து பார்த்தது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தங்கள் உள்நாட்டு ஆடவர், மகளிர் ஒரு நாள் கோப்பை, பிக்பாஷ் லீகுகளில் 2016-17-சீசனில் இந்த முறை பதிலி வீரர்களை இறக்கி சோதனை முயற்சிகள் மேற்கொண்டது.
ஆனால் இதனை ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் அறிமுகம் செய்ய மே, 2017 வரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஐசிசி அனுமதிக்காகக் காத்திருந்தது.
இலங்கை சமீபத்தில் ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டபோது குசல் மெண்டிஸ், திமுத் கருணரத்னே பவுன்சரில் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிற்பாடுதான் அவர்கள் விளையாடலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு நிறைய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட மருத்துவம் சார்ந்த பிரதிநிதியை வைத்திருக்க வேண்டும். மேட்ச் நாள் மருத்துவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு போட்டிக்கும் இருப்பது அவசியம்.
அதாவது வீரர்களின் இம்மாதிரி காயத்தினால் எந்த ஒரு அணியும் 10 வீரர்களுடன் ஆடுவது நியாயமாகாது என்பதனால் தீவிர காயத்தினால் விளையாட முடியாது போனால் மட்டுமே பதிலி வீரர்கள் களமிறக்கி ஆடவைக்கப்படலாம்.
மேலும், உதாரணமகா ஒருவருக்கு பேட்டிங் செய்யும் போது அடிபட்டு விடுகிறது, ஆனால் அப்போது ஒன்றும் தெரியவில்லை, பீல்ட் செய்யும் போது அதன் தாக்கம் ஏற்பட்டு மூளை அதிர்ச்சியாக உணர்ந்தால் அவருக்குப் பதிலாக பதிலி வீரருக்கு அனுமதியுண்டு.
முதலில் ஆஷஸ் தொடரில் இது போன்ற பதிலி வீரர் இறக்கும் முறை அமலுக்கு வருகிறது. ஆகஸ்ட் 1 முதல் சர்வதேச கிரிக்கெட் அனைத்திலும் இந்த முறை பயன்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு அணியின் மருத்துவர் மட்டுமே இதனைத்தீர்மானிக்க முடியும். அதாவது பேட்ஸ்மென் என்றால் அதேபோன்று பேட்ஸ்மென் தான் இறக்க முடியும். பவுலர் என்றால் பவுலர். அதே போல் ஸ்பின் பவுலருக்கு பதில் ஸ்பின்பவுலர்தான், துறை, புலம் மாற்றம் செய்ய முடியாது.
மற்ற சாதாரண காயங்களுக்கு பதிலி வீரர்கள் ஆடும் அனுமதி கிடையாது.