விளையாட்டு

நான், சச்சின், சேவாக் ஆட முடியாது என்று கூறிய தோனிக்கும் அதே பார்முலாதான்: மாற்றம் கோரும் கவுதம் கம்பீர்

செய்திப்பிரிவு

2023 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இப்போது முதலே இளம் வீரர்களை, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்களைத் தயார் செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி.யு முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

ஒருக்காலும்  2021-22 வரை ஓய்வு பெறப்போகாத தோனியை, அவர் ஓய்வு பெற்றால் என்ற ஒரு ‘பாவனா மொழி’ தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. அவரது வணிக ஒப்பந்தங்கள் பல  2022 வரை இருக்கலாம் ஆகவே அதுவரை அவர் இந்திய அணியில் இருக்கவே செய்வார். அவரை உட்கார வேண்டுமானால் வைக்கலாம் ஆனால் அவர் ஓய்வு பெற்றால் அது அவரது வணிக நலன்களுக்கு இடையூறாகவே இருக்கும். மேலும் 2023 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் அது வரையில் கூட தோனியை ஆடவைக்க முயற்சிகள் இருக்கலாம். 

இந்நிலையில் குழு விவாதம் ஒன்றில் கம்பீர், சேவாக் கலந்து கொண்டு பேசினர். இதில் கம்பீர் கூறியதாவது:

எதிர்காலத்தைக் கருத்தில் கொள்வது முக்கியம். தோனி கேப்டனாக இருந்த போது எதிர்காலம் பற்றி யோசித்தார். ஆஸ்திரேலியாவில் தோனி கூறியது நினைவில் உள்ளது, அதாவது நான், சச்சின், சேவாக் ஆகியோர் சிபி தொடரில் ஆட முடியாது ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் மைதானங்கள் பெரிது என்று கூறினார். அவர் உலகக்கோப்பைக்கு இளம் வீரர்கள் தேவை என்று எண்ணினார். ஆகவே நடைமுறை பயனளிக்கும் முடிவுகளை எடுக்க வேண்டுமே தவிர இங்கு உணர்ச்சிகளுக்கு இடமில்லை. 

ஆகவேதான் இப்போது தோனிக்கும் மாற்றை யோசிக்க வேண்டும். ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அல்லது எந்த ஒரு விக்கெட் கீப்பரையும் தேர்வு செய்து அவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் வாய்ப்பளிக்க வேண்டும். இவர்கள் சரியாக ஆடவில்லை எனில் அடுத்த வீரர் ஆகவே அடுத்த உலகக்கோப்பையில் இந்திய விக்கெட் கீப்பர் யார் என்று முடிவு தெரிந்து விடும். 

புள்ளி விவரங்களின் படி தோனி சிறந்த கேப்டன் என்றால் மற்ற கேப்டன்கள் அவரை விட தாழ்ந்தவர்கள் என்ற அர்த்தமல்ல. கங்குலி கேப்டன்சியில் வெளியில் நாம் வென்றிருக்கிறோம், இப்போது விராட் கோலி தலைமையில் வெற்றிகளைப் பெறுகிறோம். ஆம், தோனி 2007, 2011 உலகக்கோப்பைகளை வென்றிருக்கிறார், ஆனால் அதற்காக கேப்டனுக்கு மட்டுமே அனைத்து பெருமைகளையும் கொண்டு சேர்க்க முடியாது. அதே போல்தான் தோல்வியடையும் போது அவர் மீது மட்டுமே விமர்சனங்களை வைக்க முடியாது. 

அனில் கும்ப்ளே நீண்ட காலம் கேப்டன்சி செய்யாவிட்டாலும் அவர் நல்ல கேப்டன், ராகுல் திராவிட் இங்கிலாந்தில் தொடரை வென்றிருக்கிறார். 

இவ்வாறு கூறியுள்ளார் கம்பீர்.

SCROLL FOR NEXT