விளையாட்டு

ஓவர் த்ரோ ரன்களை சேர்க்க ஸ்டோக்ஸ் விரும்பவில்லை- ஜேம்ஸ் ஆண்டர்சன் தகவல்

செய்திப்பிரிவு

லண்டன்

உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் போது கடைசி ஓவரில் நியூஸிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் வீசிய ஓவர் த்ரோ, இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேனான பென் ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு பவுண்டரிக்கு பறந்தது. ஏற்கெனவே 2 ரன்கள் ஓடி எடுக்கப் பெற்றிருந்ததால் ஓவர் த்ரோ பவுண்டரியையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக நடுவர் தர்மசேனா 6 ரன்களை வழங்கினார்.

இதன் காரணமாகவே ஆட்டத்தை சூப்பர் ஓவர் வரை இங்கிலாந்து அணியால் கொண்டு செல்ல முடிந்தது. தொழில்நுட்ப ரீதியாக ஓவர் த்ரோவில் 6 ரன்கள் வழங்கப்பட்டது தவறு என்றும் 5 ரன்களே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என சில கிரிக்கெட் நிபுணர்கள் விமர்சித்திருந்தனர்.

ஒருவேளை 5 ரன்கள் மட்டுமே வழங்கியிருந்தால், பென் ஸ்டோக்ஸ் நான் ஸ்டிரைக்கர் முனைக்கே சென்றிருக்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றிருக்குமா என்பது சந்தேகம்தான்.

இறுதிப் போட்டி முடிவடைந்த பிறகு பென் ஸ்டோக்ஸும் ஓவர் த்ரோ சம்பவத்துக்காக தான் வருந்து வதாகவும் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனிடம் வாழ்நாள் முழுவதும் மன்னிப்புக் கேட்க போவதாகவும் தெரிவித்திருந் தார். மேலும் அந்த ரன்களுக்கு ‘ஆச்சர்யமான அதிர்ஷ்டம்’ என்று கிறைஸ்ட் சர்ச் நகரை பிறப்பிடமாக கொண்ட (நியூஸிலாந்து நாட்டில் உள்ள நகர்) பென் ஸ்டோக்ஸ் முத்திரை குத்தியிருந்தார்.

இந்நிலையில் ஓவர் த்ரோ சம்பவம் நடந்த தருணத்தில் களத்திலேயே கைகளை உயர்த்தி பென் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கேட்டதாகவும், நடுவர்கள் பவுண்டரி வழங்கிய முடிவை திரும்பப் பெறுமாறும் வேண்டுகோள் விடுத்ததாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய தகவலை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகை யில்,“கிரிக்கெட் நாகரீகம் என்ன வெனில் ஸ்டெம்புக்கு த்ரோ செய்யப் படும் பந்து நம் மேல் பட்டு பீல்டிங் பகுதியை நோக்கி சென்றால் ரன்கள் ஓட முடியாது. ஆனால் எல்லைக் கோட்டை கடந்துவிட்டால் அது நான்கு ரன்கள் தான். இது விதி, இதனை நாம் ஒன்றும் செய்ய முடியாது.

இறுதிப் போட்டி முடிவடைந்ததும் பென் ஸ்டோக்ஸை, மைக்கேல் வான் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் சென்று ‘ஓவர் த்ரோவில் பவுண்டரி சென்ற 4 ரன்களை எண்ணிக்கையிலிருந்து எடுக்க முடியுமா? எங்களுக்கு அந்த ரன்கள் வேண்டாம்’ என்று கூறி யுள்ளார். இதை மைக்கேல் வான் என்னிடம் தெரிவித்தார். விதி களின் படி பென் ஸ்டோக்ஸ் வைத்த கோரிக்கை ஏற்க முடியாத ஒன்று.

இது வீரர்கள் மத்தியிலும் பேசப் பட்டுள்ளது. பந்து பேட்ஸ்மேனை தாக்கிய பிறகு எங்கு சென்று விழுந் தாலும் அதனை ‘டெட்’ பால் என்று அறிவிக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT