ஜகார்த்தா
இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 5-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 21-ம்நிலை வீராங்கனையான ஜப்பானின் அயா ஓஹோரியை எதிர்த்து விளையாடினார்.
59 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 11-21, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சிந்து தனது 2-வது சுற்றில் 13-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்டுடன் மோதுகிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 8-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 10-ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ நிஷிமோட்டோவை எதிர்த்து விளையாடினார். 38 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார்.
2-வது சுற்றில் ஸ்ரீகாந்த், 32-ம்நிலை வீரரான பிரான்சின் பிரைஸ் லெவர்டெஸ் அல்லது 13-ம் நிலை வீரரான ஹாங் காங்கின் ராங் அங்குஸுடன் மோதக்கூடும். அதேவேளையில் 23-ம் நிலை வீரரான இந்தியாவின் சாய் பிரணீத் 15-21, 21-13, 10-21 என்ற செட் கணக்கில் 37-ம் நிலை வீரரான ஹாங்காங்கின் வாங் விங் கி வின்சென்டிடம் தோல்வியடைந்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.
இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி தங்களது முதல் சுற்றில் 13-21, 11-21 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் டோன்டோவி அஹ்மத், வின்னி ஒடவினா கந்தோ ஜோடியிடம் தோல்வியடைந்தது.