விளையாட்டு

87 பந்துகளில் மணீஷ் பாண்டே சதம்; ஷுப்மன் கில், குருணால் பாண்டியா அபாரம்: மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிராக தொடரைக் கைப்பற்றிய இந்தியா ஏ

செய்திப்பிரிவு

மே.இ.தீவுகளில் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ஏ அணி மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்று கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா ஏ அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்தியா ஏ அணியின் கேப்டன் மணீஷ் பாண்டே 4ம் நிலையில் இறங்கி 87 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுக்க, தொடக்க வீரராக களமிறங்கிய ஷுப்மன் கில் 81 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 77 ரன்களை விளாச ஹனுமா விஹாரி (29), இஷான் கிஷன் (24) பின்னால் சிறு அதிரடி காட்ட இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் ஏ அணி குருணால் பாண்டியாவின் இடது  கை சுழலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் 35வது ஓவரில் 147 ரன்களுக்குச் சுருண்டது.  

குருணால் பாண்டியா 7 ஓவர்களில் 25 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹனுமா விஹாரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இந்த சதம் மூலம் பாண்டே வரும் மே.இ.தீவுகள் தொடரில் 4ம் நிலைக்குத் தன்னை தேர்வு செய்ய வலுவான அடித்தளம் அமைத்துள்ளார்.  டாஸ் வென்ற இந்திய ஏ அணி அன்மோல்பிரீத் சிங்கை டக்கிற்கு இழந்தது. ஆனால் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் (47), இணைந்து 109 ரன்களைச் சேர்த்து அணியை நிலைப்படுத்தினர். அய்யர் கார்ன்வால் ஆஃப்ஸ்பின்னுக்கு 47 ரன்களுக்கு வெளியேறினார். பிறகு பாண்டே, கில் இணைந்து 110 ரன்களுக்கு கூட்டணி அமைத்து ஸ்கோரை 250 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். 

கில் சதமெடுக்க 23 ரன்கள் இருந்த போது ஆட்டமிழக்க மணீஷ் பாண்டே 86 பந்துகளில் சதம் கண்டு இன்ஸ்விங்கிங் யார்க்கரில் வெளியேறினார்.  இதனால் ஸ்கோர் 300 ரன்களை எட்ட முடியாமல் போனது. 

மே.இ.தீவுகள் அணி விரட்டும்போது கேம்பல் (21), சுனில் அம்ப்ரிஸ் (30) இணைந்து முதல் விக்கெட்டுக்காக 9.3 ஓவர்களில் 51 ரன்கள் கூட்டணி அமைத்தனர். சுனில் அம்ப்ரீஸை ஆவேஷ் கான் எல்.பி.செய்து வெளியே அனுப்பினார். ஆனால் அதன் பிறகு குருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஹனுமா விஹாரி இணைந்து மே.இ.திவுகள் பேட்டிங் வரிசையை காலி செய்ய 51/0 என்ற நிலையிலிருந்து 117/9 என்று தவிர்க்க முடியா தோல்வி நிலையை எட்டியது. 

ஆனால் அதன் பிறகு கீமோ பால் 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் வெளுத்துக் கட்டி 34 ரன்களை அதிகபட்சமாக எடுத்து ஹனுமா விஹாரியிடம் ஆட்டமிழக்க மே.இ.தீவுகள் கதை முடிந்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இதுவரை 3-0 என்று முன்னிலை வகிக்கிறது. 

SCROLL FOR NEXT