விளையாட்டு

ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பை மைதானமாக மாற்றி கிராமப்புற மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் வீரர்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங் கலம் அருகே உள்ள செரியலூரைச் சேர்ந்தவர் டி.சிவக்குமார் (50). வாலிபால் வீரரான இவர், பல் வேறு போட்டிகளில் பதக்கம் வென் றாலும் விளையாட்டு வீரர்களுக் கான ஒதுக்கீட்டில் அரசுப் பணிக்குச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்க வில்லை.

எனவே, தனக்கு கிடைக்காத வாய்ப்பை தனது கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் எனத் தீர்மானித் தார். அதற்காக செரியலூரில் இருந்த தனது தென்னந்தோப்பை அழித்துவிட்டு மைதானம் ஏற்படுத் தினார். அதில், நூற்றுக்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து சிறந்து வீரர், வீராங்கனைகளாக உருவாக்கி வருகிறார் சிவக்குமார்.

இதுகுறித்து, சிவக்குமார் கூறு கையில், “பள்ளி முதல் கல்லூரி வரை மாநில, தேசிய அளவில் ஏராள மான போட்டிகளில் நான் பங் கேற்ற அணி வெற்றி பெற்றது. இதை பயன்படுத்தி என்னுடன் இணைந்து விளையாடியவர்கள் அரசுப் பணிக்கு சென்றார்கள். ஆனால் என்னுடைய உயரம் 168 சென்டி மீட்டருக்கு குறைவாக (167.6 சென்டி மீட்டர்) இருப்பதாகக் கூறி நிராகரித் துவிட்டனர்.

விளையாட்டு வீரனாக பெயர் பெற்றும் அரசு வேலை கிடைக்கா தது என்னை வேதனைப்படுத் தியது. அந்த விரக்தி மனப் பான்மையை மாற்றிக்கொண்டு, திறமையுள்ள கிராமப்புற மாண வர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்து முன்னேற்றும் முயற்சியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றரை ஏக்கர் தென்னந் தோப்பை அழித்துவிட்டு மைதானம் ஒன்றை ஏற்படுத்தினேன்.

இப்போது இங்கு விடுமுறை நாட்களில் சுற்றுவட்டார கிராமங் களில் இருந்து சுமார் 300 மாணவ, மாணவிகள் என்னிடம் பயிற்சி பெறுகிறார்கள். மாணவர்களின் திறமைக்கு ஏற்ப கைப்பந்து, கால்பந்து, ஓட்டப்பந்தயம், பளு தூக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கிறேன்.

என்னிடம் பயிற்சி பெற்ற 4 பேருக்கு விளையாட்டு இட ஒதுக்கீட்டில் அரசுப் பணி கிடைத்து வேலைக்குச் சென்றுவிட்டார்கள். ஆண்டுதோறும் 40 முதல் 50 பேர் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றியையும், 60 பேர் விளை யாட்டு விடுதிகளில் தங்கிப் பயிற்சி பெறும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

எனது தோட்டத்தில் விளையாட்டு மைதானத்துக்காக அகற்றப் பட்ட மரங்கள்போக மற்ற இடங்களில் குறைந்த எண்ணிக்கையில் தென்னை மரங்கள் இருந்தன. அந்த மரங்களும் கஜா புய லால் முறிந்தும், சாய்ந்தும் விழுந்து விட்டன. இதனால் என்னிடம் பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு உணவு, உடை வழங்குவதற்கும் உபகரணங்கள் வாங்குவதற்கும் சற்று சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. எனினும் என்னுடைய நிலையை அறிந்தவர்களிடம் இருந்து உதவி பெற்று நாட்களை நகர்த்தி வருகிறேன்” என்றார்.

- கே.சுரேஷ்

SCROLL FOR NEXT