பென் ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு பந்து பவுண்டரிக்கு பறந்தது. | ஏ.எப்.பி. 
விளையாட்டு

ஓவர் த்ரோ 6 ரன்கள் கொடுத்தது மிகப்பெரிய தவறு:  விதியை சுட்டிக்காட்டி முன்னாள் நடுவர் சைமன் டாஃபல் சாடல்

ஆர்.முத்துக்குமார்

உலகக்கோப்பை 2019 -ன் பரபரப்பான அதி த்ரில் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் பீல்டர் ஸ்டம்பை நோக்கி ரன் அவுட்டுக்காக வீசிய த்ரோவின் குறுக்கே பென் ஸ்டோக்ஸின் மட்டை வந்ததால் அதில் பட்டு பவுண்டரிக்கு பறந்தது, இதனால் 6 ரன்கள் ஓவர் த்ரோ வழங்கப்பட்டது, இது ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிட்டது. நியூஸிலாந்து வீரர்களின் சோகத்துக்கும் ஏமாற்றத்துக்கும் இது பெரும் காரணமாக அமைந்ததோடு கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது. 

2வது ரன் ஓடி வரும் போது த்ரோ ஸ்டம்பை நோக்கி வர பென் ஸ்டோக்ஸ் டைவ் அடித்து ரீச் செய்யும் முயற்சியில் மட்டையில் பட்டு பவுண்டரிக்குப் பறக்க ஓவர் த்ரோ 4 ரன்கள் பிளஸ் 2 ரன்கள் ஓடியது என்ற கணக்கில் 6 ரன்கள் வழங்கப்பட்டது, இது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் ஐசிசி ஆஸ்திரேலிய நடுவர் சைமன் டாஃபல் தெரிவித்துள்ளார். 

“அது தெளிவாக தவறான தீர்ப்பாகும். இங்கிலாந்துக்கு 5 ரன்கள்தான் கொடுத்திருக்க வேண்டும். 6 ரன்கள் ஓவர் த்ரோ கொடுக்க முடியாது. 

ஓவர்த்ரோ விதிமுறை 19.8ம் பிரிவு என்ன கூறுகிறது எனில், ஓவர் த்ரோ பவுண்டரியாக மாறும்போது 4 ரன்கள் மற்றும் ஓடிய பேட்ஸ்மென்கள் பூர்த்தி செய்த ரன்கள்தான் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் கடைசி ஒவரின் 4வது பந்தில் பீல்டர் மார்டின் கப்தில் த்ரோவை ரிலீஸ் செய்யும் தருணத்தில் ஸ்டோக்ஸ் அவரது ரன்னர் ஆதில் ரஷீத் 2வது ரன்னை நிறைவு செய்யவில்லை. ஆகவே 4+1 என்று 5 ரன்கள்தான் அங்கு வந்திருக்க வேண்டும் என்பதோடு ஆதில் ரஷீத்தான் பேட்டிங் முனைக்கு வந்து  5வது பந்தைச் சந்தித்திருக்க வேண்டும்.  ஆகவே 6 ரன்கள் தவறு என்கிறார் சைமன் டாஃபல்.

ஆனால் சைமன் டாஃபல் நடுவர்களையும் பாதுகாத்துக் கூறுகையில், “அந்த தருணத்தின் பரபரப்பில் பேட்ஸ்மென்கள் 2ரன்களை பூர்த்தி செய்ததாக அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் டிவி ரீப்ளே வேறு மாதிரி முடிவைத்தான் காட்டியது.  நடுவரின் வேலை என்னவெனில் இது போன்ற தருணங்களில் பேட்ஸ்மென்கள் ரன்னை பூர்த்தி செய்கின்றனரா என்பதைக் கவனிக்க வேண்டும். அதன் பிறகு பந்தை பீல்ட் செய்பவரைப் பார்க்க வேண்டும். த்ரோ செய்யும் தருணம், பேட்ஸ்மென்கள் ரீச் செய்தார்களா என்ற தருணம் இரண்டையும் நடுவர்கள் கவனிக்க வேண்டும். 

பேட்ஸ்மென் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். 

ஆனால் இதுதான் போட்டியின் முடிவைத் தீர்மானித்தது என்று கூறுவது இங்கிலாந்து, நியூஸிலாந்து, நடுவர்கள் ஆகியோருக்கு இழைக்கும் அநீதியாகும்” என்றார் டாஃபல்.

SCROLL FOR NEXT