விம்பிள்டன் கோப்பையுடன் ஜோகோவிச் | படம்: கெட்டீ இமேஜஸ் 
விளையாட்டு

16-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச்: 4.55 மணி நேர சாதனைப் போட்டியில் ஃபெடரரை வீழ்த்தினார்

செய்திப்பிரிவு

ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார். 

37 வயதான ஃபெடரர் இதுவரை 8 முறை விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளார். நேற்றைய போட்டியில் 7-6(5), 1-6, 7-6(4), 4-6, 13-12(3) என்ற கணக்கில் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்டார். ஜோகோவிச்சுக்கு இது 16-வது கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஐந்தாவது விம்பிள்டன் பட்டமாகும். 

4 மணிநேரம் 55 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் முதல் நான்கு செட்களில் ஃபெடரரே வெற்றி பெறுவது போல இருந்தது. ஆனால் பின்னடைவிலிருந்து மீண்டு வந்து கடைசி இரண்டு மணிநேர ஆட்டத்தில் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தி வெற்றி கண்டார். 

ஐந்தாவது செட்டில் 4-2 என்று ஜோகோவிச் முன்னிலை பெறும்போது அவர் பக்கமே வெற்றி என்று கணிக்கப்பட்டாலும், ஃபெடரர் மீண்டு வந்து 4-4 என்று சமன் செய்து அழுத்தத்தைத் தந்தார். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகே ஜோகோவிச் வெற்றியை எட்டினார். 


வின்னர் - ரன்னர் பட்டங்களுடன் ஜோகோவிச், ஃபெடரர்

ஆட்டம் முடிந்ததும், "இந்தப் போட்டியை எங்களால் மறக்க முடியாது" என்று ஃபெடரரிடம் சொல்ல, அவர் "நான் முயற்சி செய்து மறந்துவிடுவேன்" என்றார். ஆனால் ஜோகோவிச்சைப் புகழவும் ஃபெடரர் தவறவில்லை. 

"எனக்கான வாய்ப்புகள் இருந்தன, அவருக்கும் தான். எனது ஆட்டத்தின் தரத்தில் எனக்கு மகிழ்ச்சி. நோவாக், வாழ்த்துகள். நம்பமுடியாத ஆட்டம். மீண்டும் அப்பாவாக, கணவனாக வாழ்க்கைக்குத் திரும்புகிறேன். எல்லாம் நல்லபடியாக இருக்கிறது" என்றார். 

விம்பிள்டன் வரலாற்றில் நீண்ட நேரம் நடைபெற்ற போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT