விளையாட்டு

ஸ்டீவ் ஸ்மித் இரட்டைச் சதம்: ஆஸ்திரேலியா 566/8 டிக்ளேர்

இரா.முத்துக்குமார்

ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஸ்டீவ் ஸ்மித் இரட்டைச் சதம் எடுக்க ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 566 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

ஸ்டீவ் ஸ்மித் 346 பந்துகளைச் சந்தித்து 25 பவுண்டரி 1 சிக்சருடன் 215 ரன்கள் எடுத்து ரூட் பந்தில் எல்.பி.ஆனார். இவர் எடுக்கும் முதல் டெஸ்ட் இரட்டைச் சதம் இதுவாகும், இதற்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக 192 ரன்களையும், மே.இ.தீவுகளுக்கு எதிராக 199 ரன்களையும் அவர் எடுத்துள்ளார்.

இன்று 337/1 என்று தொடங்கியது ஆஸ்திரேலியா, கிறிச் ராஜர்ஸ் 158 ரன்களுடன் தொடங்கி முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை அடித்தார். ஆனால் 173 ரன்கள் எடுத்திருந்த போது பிராட் பந்தில் பவுல்டு ஆனார். பிராட் இன்று அருமையாக வீசினார், நல்ல கட்டுக்கோப்புடன் நல்ல அளவில் வீசி ஓரளவுக்கு ஸ்விங் செய்தார்.

மைக்கேல் கிளார்க் இறங்கி 32 பந்துகள் வேதனையைச் சந்தித்தார். 7 ரன்கள் எடுத்திருந்த போது மார்க் உட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடி நேராக பேலன்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கிளார்க் 23 இன்னிங்ஸ்களில் 613 ரன்களை 32.36 என்ற சராசரியில் எடுத்துள்ளார் 2 அரைசத ஸ்கோர் மட்டுமே அவரது பங்களிப்பாக கடந்த 23 இன்னிங்ஸ்களில் இருந்துள்ளது. மாறாக வாட்சன் கடந்த 20 இன்னிங்ஸ்களில் 654 ரன்களை 34.42 என்ற சராசரியில் 4 அரைசத ஸ்கோருடன் எடுத்துள்ளார். ஆனால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

கிளார்க் ஆட்டமிழந்த பிறகு வோஜஸ் 25 ரன்கள் எடுத்து பிராட் வீசிய பந்தை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வாட்சனுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 12 ரன்களில் பிராட் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

அறிமுக விக்கெட் கீப்பர் நெவில் 45 ரன்களை எடுத்து ரூட் பந்தில் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்தார். ஜான்சனை 15 ரன்களில் பிராட் வீழ்த்தினார். ஸ்டார்க் 12 நாட் அவுட். 566/8 என்ற நிலையில் டிக்ளேர் செய்யப்பட்டது.

பிராட் 27 ஓவர்கள் 5 மெய்டன்கள், 83 ரன்களுக்கு 4 விக்கெட். மொயீன் அலிக்கு இந்தத் தடவை சாத்துமுறை அரங்கேறியது, 36 ஓவர்களில் 138 ரன்கள் ஒரு விக்கெட். ரூட் 2 விக்கெட்.

தொடர்ந்து இன்று 29 ஓவர்கள் சோதனையை எதிர்கொள்ள களமிறங்கிய இங்கிலாந்துக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஆடம் லித், ஸ்டார்க் வீசிய 2-வது பந்தை, வெளியே சென்ற பந்தை ஆட முற்பட்டார் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பருக்கு முதல் கேட்சாக முடிந்தது. தற்போது இன்று இன்னமும் 23 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து 21/1 என்று ஆடி வருகிறது, கேப்டன் குக் 4 ரன்களுடனும் கேரி பேலன்ஸ் 17 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT