விளையாட்டு

ஆஷஸ் முதல் டெஸ்ட் உணவு இடைவேளை: இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள்

இரா.முத்துக்குமார்

கார்டிப் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கிய ஆஷஸ் தொடர் முதல் டெஸ் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

ஜோ ரூட் 33 ரன்களுடனும், கேரி பேலன்ஸ் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.

43/3 என்று சரிவு முகம் காட்டிய நிலையில் ஜோ ரூட் ஒரு சிறு எதிர்த்தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுக்க 4-வது விக்கெட்டுக்காக 51 பந்துகளில் 45 ரன்கள் விரைவு கதியில் சேர்க்கப்பட்டது.

ஆஷஸ் அறிமுகப் போட்டியில் ஆடும் ஜோஷ் ஹேசில்வுட் தனது 6-வது பந்தில் எதிரணி ஆஷஸ் அறிமுக வீரர் ஆடம் லித் விக்கெட்டைச் சாய்த்தார்.

லெக் அண்ட் மிடிலில் பிட்ச் ஆன பந்தை லெக் திசையில் திருப்ப முயன்றார் லித் ஆனால் பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு கல்லியில் டேவிட் வார்னருக்கு தாழ்வான கேட்ச் ஆனது.

2 மைடன் ஓவர்களுக்குப் பிறகு மிட்செல் ஸ்டார்கை எடுத்து விட்டு, கதீட்ரல் சாலை முனையில் மிட்செல் ஜான்சன் கொண்டு வரப்பட்டார். இவர் பந்துகளை நன்றாக எழும்பச் செய்தார். ஆனால் வேகம் இருக்க கட்டுப்பாடு இல்லாததால் சில பவுண்டரி பந்துகளும் விழுந்தன, குறிப்பாக ஜோ ரூட் இவரை அருமையாக ஆடினார். மிட் ஆஃபில் அடித்த டிரைவ் உண்மையில் அருமையான ஷாட் ஆகும். ஜான்சன் 6 ஓவர்களில் 35 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

மைக்கேல் கிளார்க், வீரர்களை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் கேப்டன் அல்ல. 10-வது ஓவரில் ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயனைக் கொண்டு வந்தார்.

நிறைய முன்னாள் வீரர்கள் நேதன் லயனை இங்கிலாந்து வீரர்கள் சாத்தியெடுக்க வேண்டும் என்றனர், ஆனால் அலிஸ்டர் குக்கிற்கு அது சரியான ஆலோசனையாகப் படவில்லை போலும். நேதன் லயனின் 14 தொடர் டாட் பால்களுக்குப் பிறகு குக் ஒரு கட் ஷாட் ஆட முயல எட்ஜ் ஆகி பிராட் ஹேடினிடம் கேட்ச் ஆனது. குக் 20 ரன்களில் வெளியேறினார்.

இயன் பெல் 1 ரன் எடுத்து மிட்செல் ஸ்டார்க்கின் ஃபுல் லெந்த் ஸ்விங் பந்துக்கு பிளம்ப் எல்.பி.ஆனார். அவரது மோசமான பார்ம் தொடர்கிறது.

கடந்த 9 இன்னிங்ஸ்களில் இயன் பெல்லின் ஸ்கோர் இதோ: 11, 1, 0, 0, 1, 29, 12, 1, 1.

ஜோ ரூட் களமிறங்கி ஸ்டார்க் பந்தில் கால்காப்பில் வாங்க, பலத்த முறையீடு அவரது மட்டையின் உள்விளிம்பில் பட்ட பந்தினால் அவுட் ஆக மாறவில்லை. மீண்டும் ஹேடின் ஒரு எட்ஜ் கேட்சை ரூட்டுக்கு கோட்டை விட்டார். ஆனால் அதன் பிறகு அவர் ஆடிய ஷாட்கள் அபாரமானது. ஆக்ரோஷமான கட் ஷாட்களும் அருமையான டிரைவ்களும் ரூட்டின் பவுண்டரிகளில் அடங்கும்.

SCROLL FOR NEXT