பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி, அணியை வழி நடத்துவதில் அதிக கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி யோசனை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 போட்டிகளில் பங்கேற்று 6-ல் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் கோலி குறித்து கங்குலி கூறியிருப்பது:
கேப்டன் பொறுப்பில் ஏற்படும் மன அழுத்தம், ஒருவரை அறியாமலேயே அவருக்குள் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவே அவர்களின் ஆட்டத்திறனையும் பாதிக்கத் தொடங்கும். எனவே விராட் கோலி கேப்டன்ஷிப்பில் உள்ள பொறுப்புகளில் அதிகம் கவனம் செலுத்தாமல், தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்பதே எனது அறிவுரை.
20 ஓவர் கிரிக்கெட் போட்டி என்பது குறைந்த நேரத்தில் முடிந்துவிடக் கூடியது. அதில் கேப்டனாக இருப்பவர் களத்தில் இருக்கும்போது மட்டும் தேவைக்கேற்ப வியூகங்களை வகுத்துக் கொள்ள முடியும். விளையாடுவதற்கு முந்தைய நாளிலேயே போட்டி குறித்து அதிகம் திட்டமிடுவது கேப்டன்களின் தனிப்பட்ட ஆட்டத்திறனை நிச்சயமாக பாதிக்கும். இதற்கு உதாரணமாக கம்பீரை கூறலாம். கொல்கத்தா அணியின் கேப்டனாக இருக்கும் அவர் முதல் மூன்று ஆட்டங்களில் மிகவும் மோசமாக விளையாடி ஆட்டமிழந்தார்.
ஆனால் கடைசி 3 ஆட்டங்களில் அதிக ரன்களை குவித்து விட்டார். அவர் தனது கவனத்தை பேட்டிங்கில் திருப்பியதே இதற்குக் காரணம். கேப்டனாக இருக்கும்போது புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்று கங்குலி கூறியுள்ளார்.