இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் தனது 2-வது இன்னிங்ஸில் 63 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்துள்ளது.
377 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்ததால் கடும் பின்னடைவை சந்தித்தது. ஆனால் 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷான் மசூத், யூனிஸ்கான் இருவரும் சதமடிக்க, பாகிஸ்தான் சரிவிருந்து மீண்டு வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.
இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெற 147 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளதால் அந்த அணி வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இலங்கையின் பல்லகெலேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 278 ரன்களும், பாகிஸ்தான் 215 ரன்களும் எடுத்தன. பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மேத்யூஸ் 77, சன்டிமால் 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் சன்டிமால் 67 ரன்கள் எடுத்து வெளியேற, கேப்டன் மேத்யூஸ் 252 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 122 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இலங்கை அணி 95.4 ஓவர்களில் 313 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் இம்ரான் கான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து 377 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ் தான் அணியில் அஹமது ஷெஸாத் ரன் ஏதுமின்றியும், பின்னர் வந்த அசார் அலி 5 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுக்க, பாகிஸ்தான் தடுமாறியது.
ஆனால் 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷான் மசூத் தனது முதல் சதத்தையும், யூனிஸ்கான் தனது 30-வது சதத்தையும் பதிவு செய்ய, பாகிஸ்தான் சரிவிலிருந்து மீண்டது. ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 63 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 114, யூனிஸ்கான் 101 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.