விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தா அணியில் ஹெல்டர் போஸ்டிகா

பிடிஐ

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2-வது சீசனில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணிக்காக களமிறங்குகிறார் போர்ச்சுகல்லைச் சேர்ந்த ஹெல்டர் போஸ்டிகா. 32 வயதான போஸ்டிகா ‘மார்க்கி’வீரராக இடம்பெற்றுள்ளார்.

கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் முன்னணி வீரராகத் திகழ்ந்த லூயிஸ் கார்ஸியா காயம் காரணமாக இந்த சீசனில் இடம்பெறவில்லை. அவருடைய இடத்தில் போஸ்டிகா சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கொல்கத்தா அணியின் தலைமைப் பயற்சியாளர் ஹபாஸ் கூறுகையில், “போஸ்டிகாவின் வருகை எங்கள் அணிக்கு வலு சேர்க்கும். இந்திய வீரர்களும், சர்வதேச வீரர்களும் போஸ்டிகாவிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமையும். அவருடைய வருகை எங்கள் அணியையும், கொல்கத்தா ரசிகர்களையும் பெருமையடையச் செய்யும்” என்றார்.

2003-ம் ஆண்டு போர்ச்சுகல் அணியில் இடம்பிடித்த போஸ்டிகோ 2006, 2014 உலகக் கோப்பை போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடியுள்ளார். போர்ச்சுகல் அணிக்காக 71 சர்வதேச போட்டிகளில் விளையாடி 27 கோல்களை அடித்துள்ளார். இதுதவிர ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2004, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் போர்ச்சுகல் அணிக்காக ஆடியிருக்கிறார். அதில் 2004-ல் போர்ச்சுகல் அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT