லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 337 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 129 ரன்களுடனும், கிறிஸ் ராஜர்ஸ் 158 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் கள உத்தி தற்காப்பு வழியில் மிகவும் விரைவாகச் சென்றதையடுத்து இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் மீது ஸ்டீவ் ஸ்மித் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
"எனக்கு மிகவும் ஆச்சரியமென்னவெனில், அலிஸ்டர் குக், டீப் பாயிண்ட் வைத்து பவுலிங் போட தொடக்கத்திலேயே டிரவர் பெய்லிஸ் எப்படி அனுமதித்தார் என்பதுதான். இது பேட்டிங் சாதக ஆட்டக்களம்தான் இல்லையென்று கூறவில்லை, ஆனால் அவர்கள் மிகவும் விரைவாகவே பீல்டர்களை தள்ளி நிறுத்த தொடங்கினர், இத்தகைய உத்தியை எங்களிடமிருந்து நிச்சயம் அவர்கள் எதிர்பார்க்க முடியாது.
முதல் இன்னிங்ஸில் பெரிய அளவுக்கு ரன்களைக் குவிப்பது முக்கியம். லார்ட்ஸ் பிட்ச் கொஞ்சம் மந்தமாகவே உள்ளது. அதனால் முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை எட்டினால் பிற்பாடு பிட்ச் கொஞ்சம் திரும்ப தொடங்கும் போது நேதன் லயனை விரைவில் அறிமுகம் செய்து நெருக்கடி கொடுப்போம்.
நான் 50 ரன்களில் இருந்த போது ஒரு வாய்ப்பு கொடுத்தேன். அதன் பிறகு மிகவும் தன்னுணர்வுடன் ஆடினேன். இப்போது கிரீஸில் வசதியாக உணர்கிறேன்” என்றார் ஸ்டீவ் ஸ்மித்.