விளையாட்டு

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லாமல் ஓய்வு பெற மாட்டேன்: பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சூளுரை

பிடிஐ

ஆஸ்திரேலியா மற்றும் இங்கி லாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வரையில் ஓய்வுபெற மாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியபோது 100-வது டெஸ்ட் போட்டியில் விளை யாடியவர் என்ற பெருமையைப் பெற்றார் 37 வயதான யூனிஸ்கான்.

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 377 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் யூனிஸ்கான் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவிக்க, அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

பாகிஸ்தானின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான யூனிஸ் கானின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாதது குறையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய யூனிஸ் கானுக்கு கராச்சியில் பாராட்டு விழா நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய அவர் கூறியதாவது: நான் எனது எண்ணப்படியே செல்வேன். ஆஸ்திரேலியா மற்றும் இங்கி லாந்து மண்ணில் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை வெல்ல நான் பங்களிப்பு செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கி லாந்து மண்ணில் வெல்லும்பட் சத்தில் தலைசிறந்த அணியாக பாகிஸ்தான் உருவெடுக்கும். ஆஸ்திரேலியாவில் நான் சதமடித்ததில்லை.

எனவே ஓய்வு பெறுவதற்கு முன் அங்கு சதமடிக்க விரும்புகிறேன் என்றார். பாகிஸ்தான் கடைசியாக 1996-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை வென்றது. ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருக்கும் யூனிஸ் கான், சமீபத்தில் பல்லகெலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 30-வது சதத்தை அடித்தபோது, டான் பிராட்மேனை (29 சதம்) பின்னுக்குத் தள்ளி அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் 10-வது இடத்துக்கு முன்னேறினார்.

யூனிஸ் கான் இன்னும் 19 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் அதிக ரன் குவித்த பாகிஸ்தானியரான ஜாவித் மியான் தத்தின் சாதனையை முறியடித்துவிடுவார். அது குறித்துப் பேசிய அவர், “மியான்தத்தின் சாதனையை முறியடிக்கும்போது அது மிகப்பெரிய கவுரவமாக அமையும். அதிக ரன் அடிப்பது ஒரு விஷயமே அல்ல. ஆனால் என்னுடைய இளம் வயது ஹீரோவான மியான் தத்தோடு என்னை ஒப்பிடுவதை கவுரவமாகக் கருதுகிறேன்” என்றார்.

தனது குடும்பத்தினரை இழந்தது குறித்துப் பேசிய யூனிஸ் கான், “நான் எனது தந்தை, சகோதரி மற்றும் இரு சகோதரர்களை இழந்துவிட்டேன்.

அவர்களுடைய மரணம்தான் என்னை தலைசிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கியது. ஏனெனில் நான் கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்று விரும்பியது அவர்கள்தான்” என்றார்.

SCROLL FOR NEXT