ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கேப்டன் ரஹானே ஏமாற்றமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
"ஜிம்பாப்வே அணியின் ஆட்டத்தை பாராட்ட வேண்டும். தொடர் முழுதும் அவர்கள் நன்றாக விளையாடினாலும் 2-வது டி20 போட்டியில் அவர்களது பந்துவீச்சு, மற்றும் பீல்டிங் அபாரமாக இருந்தது. தோல்வி ஏமாற்றமளிக்கிறது. ஆனால் தொடர் முழுதும் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். டி20-யில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஜிம்பாப்வே அணியின் ஆற்றல் சிறப்பாக அமைந்தது. அவர்கள் ஸ்பின்னர்கள் சரியான லெந்த்தில் வீசினர். 2 அருமையான ரன் அவுட்கள் மற்றும் 2 கேட்ச்களையும் அருமையாகப் பிடித்தனர்.
தொடர்ந்து விக்கெட்டுகளை அவர்கள் கைப்பற்றினர், பீல்டிங்கும் அவர்கள் வெற்றிக்கு ஒரு காரணம். பேட்டிங் ஓரளவுக்கு இருந்தாலும் அவர்கள் பந்து வீச்சும், பீல்டிங்கும் அபாரமாக இருந்தது.
எங்களால் ஒரு பார்ட்னர்ஷிப்பை கூட அமைக்க முடியவில்லை. 6 ஓவர்களுக்குப் பிறகு பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில்தான் தேவைப்பட்டது, ஆனால் சரியாக பேட் செய்யவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.