இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றது. லியாண்டர் பயஸுக்கு இது 16-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
வெறும் 40 நிமிடங்களே நடந்த இந்த இறுதிப் போட்டியில், ஆஸ்திரியாவின் பேயா, ஹங்கேரியாவின் பாபோஸ் ஜோடியை பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தியது.
பயஸ் - ஹிங்கிஸ் ஜோடி, பேயா - பாபோஸ் ஜோடியை அசாதாரணமாக எதிர் கொண்டது. முதல் செட்டை 19 நிமிடங்களில் பயஸ் ஜோடி கைப்பற்றியது.
லியாண்டர் பயஸ் வெல்லும் 8-வது கலப்பு இரட்டையர் சாம்பியன் பட்டம் இது. மேலும் ஹிங்கிஸுடன் இணைந்து அவர் வெல்லும் இரண்டாவது பட்டம். முன்னதாக இருவரும் ஆஸ்திரேலியன் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.
மகளிர் இரட்டையர் பிரிவு இறுதியில் சானியா மிர்சாவோடு இணைந்த ஹிங்கிஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அந்த போட்டி முடிந்த அடுத்த நாளே கலப்பு இரட்டையர் இறுதியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
42 வயது பயஸ், இந்தியாவின் தனித்துவம் மிக்க டென்னிஸ் வீரர் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்ள் குவிந்தவண்ணம் உள்ளன.