விளையாட்டு

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியில் களமிறங்கும் விராட் கோலி

ஐஏஎன்எஸ்

இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2-வது 4 நாள் போட்டியில் இந்தியா ஏ அணிக்கு கேப்டன் விராட் கோலி விளையாடவிருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு இது ஒரு நல்ல தயாரிப்பாக அமையும் என்ற காரணத்தினால் 2-வது 4 நாள் போட்டியில் விளையாட கோலி முடிவெடுத்துள்ளார்.

தற்போது சென்னையில் முதல் 4 நாள் போட்டி நடைபெற்று வருகிறது. மீண்டும் சென்னையில் ஜூலை 29-ம் தேதி 2-வது போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் விராட் கோலி களமிறங்குகிறார்.

இலங்கையில் ஆடுவதற்கு முன்பாக சென்னை பிட்சில் ஆடுவது ஒரு நல்ல பயிற்சியாக அமையும் எனவே வாய்ப்பளிக்க வேண்டும் என்று விராட் கோலி பிசிசிஐ அணித்தேர்வாளர்களிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

26 வயது நிரம்பிய விராட் கோலி 2012 முதல் இந்திய பேட்டிங் வரிசையின் இன்றியமையாத வீரராகத் திகழ்கிறார். 2012 முதல் 34 டெஸ்ட் போட்டிகளில் 2,561 ரன்களை 10 சதங்களுடன் அவர் எடுத்துள்ளார். சராசரி 45.73.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்குகிறது. அடுத்த 2 போட்டிகளும் கொழும்புவில் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT