ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸில் நேற்று இங்கிலாந்து 37 ஓவர்களில் 103 ரன்களுக்குச் சுருண்டு ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.
இதில் 5-வது விக்கெட்டாக பென் ஸ்டோக்ஸ் ரன் அவுட் ஆன விதம் பலதரப்பு விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது.
2005 ஆஷஸ் தொடரில் பிளிண்டாஃப் என்ன செய்தாரோ அதனை பென் ஸ்டோக்ஸ் செய்வார் என்று தொடருக்கு முன்பாக இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் கூறியிருந்தார். பென் ஸ்டோக்ஸும் தனது சிறப்பான ஆட்டத்தை முதல் இன்னிங்சில் வெளிப்படுத்தி 87 ரன்களை விரைவாக எடுத்தார்.
ஆனால் 2-வது இன்னிங்ஸில் 3 பந்துகளைச் சந்தித்த பென் ஸ்டோக்ஸ், தனது கணக்கைக் கூட தொடங்கவில்லை.
இந்நிலையில் ஜோ ரூட் லெக் திசையில் ஒரு பந்தை அடித்து விட்டு விரைவு சிங்கிளுக்காக பென் ஸ்டோக்ஸை அழைத்தார். ஜான்சன் பந்தை எடுத்து நேராக ஸ்டம்பில் அடிக்க, கிரீஸை மட்டையை நீட்டி கடக்க வேண்டிய பென் ஸ்டோக்ஸ் மட்டையை தொங்கவிட்டுக் கொண்டே ஓடினார், கிரீஸில் வலது காலை வைக்கும் முன்பாக பந்து ஸ்டம்பைத் தாக்கியது. பந்து தாக்கும் போது ஸ்டோக்ஸின் மட்டை, கால்கள் எதுவும் கிரீஸுக்குள் இல்லை. இப்படி ரன் அவுட் ஆனார்.
யோசனையில்லாமல் அவர் எப்படி ரன் ஓடினார், எப்படி கிரீஸிற்குள் முதலில் மட்டையைக் கொண்டு வர மறந்தார் என்பது பெரிய விவாதத்துக்குரிய விவகாரமாகிவிட்டது.
இது குறித்து ஜெஃப் பாய்காட் விமர்சனம் செய்யும் போது, “பென் ஸ்டோக்ஸ் ஜான்சனின் த்ரோ தன் மேல் பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒதுங்கினார். இதனால் மட்டையையும், கால்களையும் கிரீஸுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. இரண்டும் அந்தரத்தில் இருந்தன. முதலில் ஒரு பேட்ஸ்மென் தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள வேண்டும், பந்து மேலே வந்து அடித்தால் என்ன? பந்து மேலே வந்து தாக்குவதை ஒரு பேட்ஸ்மென் ஒரு பொருட்டாகக் கருதக்கூடாது, ஆனால் பென் ஸ்டோக்ஸ் தனது விக்கெட்டின் முக்கியத்துவம் பற்றிய யோசனை இல்லாமல் ரன் அவுட் ஆனார்” என்று சாடியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் ரன் அவுட் ஆன விதம் குறித்து கேப்டன் குக்கும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.