விளையாட்டு

அலிஸ்டர் குக்கின் மது விருந்து அழைப்பை மறுத்த மைக்கேல் கிளார்க்

இரா.முத்துக்குமார்

ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதையடுத்து ஆஸ்திரேலிய அணியை மது விருந்துக்கு குக் அழைத்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் அந்த அழைப்பை ஏற்க மறுத்தார்.

இதனை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உறுதி செய்தார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் கூட வெற்றி பெற்ற போதும் தோல்வியடைந்த போதும் இரு அணியினரும் மது விருந்தில் கலந்து கொண்டதாக குறிப்பிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன், எதிரணியினரை போட்டிக்கு பிறகு மதுபான விருந்துக்கு அழைப்பது என்பது ஒரு மரபு என்று தெரிவித்துள்ளார்.

"தோற்கிறோமோ, ஜெயிக்கிறோமோ அது பிரச்சினையல்ல, கடுமையான போட்டிக்குப் பிறகு இரு அணியினரும் விருந்தில் கலந்து கொள்வது என்பது ஒரு சுவையான அனுபவம். இதனால் கேப்டன் குக் இதனை ஒரு யோசனையாக முன்வைக்க நாங்களும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டோம், ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் மறுத்து விட்டார், அவர் ஏன் மறுத்தார் என்பது தெரியவில்லை” என்றார் ஆண்டர்சன்.

2005-ம் ஆண்டு புகழ்பெற்ற ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலிய அணி தோல்விக்குப் பிறகு கூட இங்கிலாந்து ஓய்வறையில் பீர் அருந்தினர். ஆனால் அவ்வாறு தோழமை பாராட்டுவதுதான் தோல்விக்குக் காரணம் என்று அப்போதைய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார், “குடிப்பது ஒரு பெரிய பிரச்சினைதான்’ என்று பாண்டிங் கூறியதாக நினைவு.

இப்போதும் கிளார்க் அதனை மனதில் கொண்டே குக்கின் அழைப்பை நிராகரித்திருக்கலாம் என்று ஆஸி., இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT