விளையாட்டு

ஜிம்பாப்வே வந்து சேர்ந்த ரஹானே தலைமை இந்திய அணி: வெள்ளிக்கிழமை முதல் போட்டி

செய்திப்பிரிவு

3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட அஜிங்கிய ரஹானே தலைமை இந்திய அணி ஜிம்பாப்வே சென்றடைந்தனர்.

இந்த அணியின் மூத்த வீரரான ஹர்பஜன் சிங் இது பற்றி ட்விட் செய்துள்ளார், “ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே வந்தடைந்தோம். உள்ளூர் டிரம் இசைக் கலைஞர்கள் எங்களை வரவேற்றனர், மீண்டும் இவர்களைப் பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.

நாளை முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டி ஹராரேயில் நாளை இந்திய நேரம் 12.30 மணிக்குத் தொடங்குகிறது.

ராபின் உத்தப்பா இந்தத் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படவிருக்கிறார். எனவே இது அவருக்கு ஒரு முக்கியமான தொடராகும். அதே போல் மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி, அக்சர் படேல் போன்றோருக்கும் முக்கியமான தொடராகும். முரளி விஜய் ஒருநாள் அணியில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இடம்பெற்றுள்ளார்.

கரண் சர்மா துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதில் அவர் தனது ஆக்ரோஷ இன்னிங்ஸை ஆடினால் வலுவான இந்திய ஒருநாள் அணியில் திணறிக்கொண்டிருக்கும் வீரர் ஒருவரை நீக்கி விட்டு முரளி விஜய்க்கு வாய்ப்பளிக்கலாம்.

ராபின் உத்தப்பா தனக்கு கிடைத்த வாய்ப்பு பற்றி கூறும்போது, “கடைசியில் ஒரு முழு தொடர் விளையாடக் கிடைத்ததற்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். ஆண்டுக்கு ஓரிரு போட்டிகள் என்பதை விட ஒரு முழு தொடர் என்பது சிறந்த வாய்ப்பு. இதனை நான் பயன்படுத்தி அணியில் எனது இடத்தைத் தக்கவைப்பேன்” என்றார்.

ராபின் உத்தப்பா, 21 வயது அதிரடி தொடக்க வீரராக இந்திய அணியில் நுழைந்தார். 2006-இல் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுக போட்டியிலேயே 86 ரன்கள் விளாசி கவனத்தை ஈர்த்தார். விளையாடிய குறைந்த போட்டிகளிலும் கடைசியில் இறங்கி சில வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார் உத்தப்பா. 2008 விபி தொடர் இறுதிப் போட்டியில் சச்சினுடன் தொடக்க வீரராக களமிறங்கிய ராபின் உத்தப்பா, பிரட் லீ வீசிய ஒரு பந்தை பின்னால் சென்று எகிறு பந்தை டென்னிஸ் ஷாட்டில் சைட் ஸ்க்ரீனுக்கு மேலாக அடித்த சிக்சர் மறைந்த வர்ணனை மேதை ரிச்சி பெனோவையே வியக்கவைத்த ஷாட் ஆகும்.

இப்போது உத்தப்பாவுக்கு வயது 29, 8 ஆண்டுகள் உள்ளேயும் வெளியேயுமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தார். இதில் துரதிர்ஷ்டம் என்னவெனில் உள்நாட்டு கிரிக்கெட்டில் 2, 3 சீசன்களாக அதிக ரன்களையும் குவித்துள்ளார்.

வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் கிரிக்கெட்டுக்கே முழுக்கு போட முடிவெடுத்தார். ஆனால், பலரது யோசனைகளின் அடிப்படையில் மீண்டும் பிரவீண் ஆம்ரேயின் கீழ் பயிற்சி பெற்று இன்று ஒரு தன்னம்பிக்கை மிக்க பேட்ஸ்மெனாக திகழ்கிறார்.

ரஹானேவுக்கு தன்னை நிரூபிக்க ஒரு அரிய வாய்ப்பு.

SCROLL FOR NEXT