விளையாட்டு

ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை: மும்பை வீரர் ஹிகென் ஷா விளையாட பிசிசிஐ தடை

ஜி.விஸ்வநாத்

ஐபிஎல் 8 தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸின் வீரர் ஒருவரை சூதாட்டத்துக்காக வலியுறுத்திய மும்பை வீரர் ஹிகென் ஷா விளையாட பிசிசிஐ தடை செய்தது.

ஹிகென் ஷா 32 ரஞ்சி டிராபி போட்டிகளில் மும்பைக்காகவும், 4 போட்டிகளில் ஜம்மு காஷ்மீர் அணிக்காகவும் ஆடியுள்ளார். மேற்கு மண்டலத்துக்காக ஒரு போட்டியில் ஆடியுள்ளார்.

இடது கை பேட்ஸ்மெனான இவர் பிசிசிஐ தொடர்பான எந்த வித கிரிக்கெட் ஆட்டத்திலும் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ-யின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி முறையான விசாரணைக்குப் பிறகு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

30-வயதான ஹிகென் ஷா நீக்கம் குறித்து பிசிசிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ஐபிஎல் அணியின் வீரர் ஒருவரை சூதாட்டத்துக்காக வற்புறுத்திய இந்த வீரர் எந்த வித கிரிக்கெட் ஆட்டத்திலும் ஆட தடை செய்யப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த மற்றொரு ஐபிஎல் வீரரை இவர் முறைதவறி அணுகியுள்ளார். ஆனால் அணுகப்பட்ட அந்த வீரர் உடனடியாக தனது உரிமையாளரிடம் தெரிவிக்க, அவர் ஊழல் ஒழிப்பு பிரிவிடம் புகார் அளித்தார். இதனையடுத்து பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா, ஊழல் ஒழிப்பு கமிட்டியின் விசாரணைக்கு உத்தரவிட்டார். விரிவான விசாரணைக்குப் பிறகு ஹிகென் ஷா மீதான புகார் உறுதியானது” என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 8 தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு விளையாடும் மும்பை வீரர் ஒருவரை சூதாட்டத்தில் ஈடுபடுமாறு மும்பை வீரர் ஒருவர் அணுகியதாக உறுதியற்ற தகவல்கள் வெளியாகின. அணுகிய வீரர் ஐபிஎல் அணியில் இல்லாதவர் என்பதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சி.இ.ஓ. ரகு ஐயர் தெரிவித்தார்.

இப்போது அந்த வீரர் அணுகியது விசாரணையில் உறுதியானதால் தடை செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT