விளையாட்டு

மிட்செல் ஜான்சன் வேகத்தில் நிலைகுலைந்த ஸ்டீவ் ஸ்மித், அடிபட்ட ஷான் மார்ஷ்

இரா.முத்துக்குமார்

ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடருக்காக முழு மூச்சில் பயிற்சி பெற்று வருகிறது. இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது ஜான்சனின் ஆக்ரோஷத்துக்கு ஸ்டீவ் ஸ்மித் நிலைகுலைய, ஷான் மார்ஷ் விரலைப் பெயர்த்தது மற்றொரு பந்து.

எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், ஜான்சன் ஆகியோர் விளையாடவில்லை. இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடுபிட்சில் மார்ஷ், ஸ்மித், ஜான்சன் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்து அணி தன்னிடமிருந்து ஆஷஸ் தொடரில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை காட்டும் விதமாக ஜான்சன் கடும் வேகமும் ஆக்ரோஷமும் காட்டினார்.

அதில்தான் உலகின் தற்போதைய தரவரிசை நம்பர் 1 வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஜான்சனின் பந்தை எதிர்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டதோடு ஒரு பந்தில் பேலன்ஸ் இழந்து நிலைகுலைந்து தரையைத் தொட்டார்.

ஆனால், ஷான் மார்ஷுக்கோ ஒரு பந்து நல்ல லெந்த்திலிருந்து எழும்ப கையில் அடிவாங்கினார், உடனே மட்டையை கீழே போட்டுவிட்டு கையை உதறத் தொடங்கினார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கு கிறிஸ் ரோஜர்ஸுக்கு பதிலாக ஷான் மார்ஷை துவக்கத்தில் களமிறக்கலாம் என்பதை டேரன் லீ மேன், மைக்கேல் கிளார்க் ஆகியோர் பரிசீலனை செய்து வரும் நிலையில் ஜான்சனின் எழும்பிய பந்து அவரது விரலைப் பதம் பார்த்தது.

மார்ஷின் விரல் நகம் பெயர்ந்ததாக பிற்பாடு தெரியவந்தது.

SCROLL FOR NEXT